இதோட முடியாது.. பாஜகவின் அடுத்த ‘டார்கெட்’?.. புட்டுப் புட்டு வைக்கும் பத்திரிகையாளர் ப்ரியன்!

சென்னை : “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை குறி வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவை குறிவைக்கும் முயற்சியாகவே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு, திமுகவினர் பல்வேறு வழிகளில் முறைகேடாகப் பணம், சொத்துகளைச் சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். முதல் பட்டியலில் வெளியிட்டுள்ள திமுகவினரின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலை சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், பாஜக கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறதே, நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்ற கேள்விகளை பலரும் முன்வைத்து வருகின்றனர். அண்ணாமலை ஆதாரமில்லாமல் வாய்க்கு வந்த குற்றச்சாட்டுகளைச் சொல்வதாக திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை மீறி பண மோசடி நடந்திருக்கிறதா, அப்படியென்றால் பாஜக ஏன் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன. அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

ப்ரியன் பேசுகையில், “இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை வேறு நாடுகளுக்கு கொண்டு போய் வேறு வகையில் இந்தியாவில் முதலீடு செய்யும் நடைமுறை பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் செய்துகொண்டு இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தபோது கறுப்பு பணம் ஒழியும் என்றது பாஜக அரசு. ஆனால், இப்போதும் கறுப்பு பணம் அதிகரித்துத்தான் இருக்கிறது.

 How does BJP targeting dmk : Journalist priyan explains

பாஜக அரசு அறிமுகப்படுத்திய 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே சென்றது என்றே தெரியவில்லை. மொத்தமாக பதுக்கப்பட்டு விட்டது. கறுப்பு பணத்தை ஒழிப்பேன், சுவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்களின் பணத்தை எடுத்து வந்து ஒவ்வொரு இந்தியர்களின் கணக்கிலும் போடுவோம் என்றார்கள். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது பாஜக அரசு. ஆருத்ரா மோசடி வழக்கில் ஹரீஷ் யார்? பாஜகவில் யார் யாருக்கு பணம் கொடுத்தீர்கள் என்றெல்லாம் விசாரிக்க அமலாக்கத்துறை முன்வருமா? பல நிறுவனங்களுக்கு திடீரென வெளிநாட்டில் இருந்து வரும் முதலீடுகள் பெரும்பான்மையானவை முறைகேடாக நடப்பவை தான்.

அண்ணாமலை பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டை அமலாக்கத்துறையிடம் கொடுத்து அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை குறி வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக அரசு. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பி.ஆர்.எஸ், ஆர்ஜேடி என பல கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது.

 How does BJP targeting dmk : Journalist priyan explains

அந்தவகையில், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவை குறிவைக்கும் நடவடிக்கைகளையும் பாஜக மேற்கொள்ளும். தற்போது அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் நடந்தவை. தற்போதைய ஆட்சியில் ஊழல் நடந்ததாக கூறவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை பற்றி தற்போது குற்றம்சாட்டியுள்ளதால் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை.

அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கும் அனைவருமே எப்படியும் முறைப்படி பல நிறுவனங்கள் நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை அரசுக்கு கணக்கு காட்டி வருவார்கள். இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அதை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டிய கடமை பாஜகவுக்கு இருக்கிறது. இதில் குற்றமில்லை என நிரூபிக்க வேண்டியது திமுகவின் பொறுப்பு. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் திமுக மீது விசாரணைக்கு தயாராக அண்ணாமலை வழிவகை செய்து கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.