மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயது பெண்ணை போரூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்பர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய ஆனந்த பத்மநாபன், அந்தப் பெண்ணுடன் உறவில் இருந்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணிடமிருந்து 3 லட்சம் ரூபாய் வரை ஆனந்த பத்மநாபன் வாங்கி ஏமாற்றியிருக்கிறார். இந்தச் சூழலில் அந்தப் பெண்ணை ஆனந்த பத்மநாபன் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மோசடி, பாலியல் உறவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து ஆனந்த பத்மநாபனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அல்லிக்குளத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
வழக்கு விசாரணை நிறைவடைந்து கடந்த 17-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஆனந்த பத்மநாபன்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 55,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.