சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை நேரடியாக அட்டாக் செய்யாமல் இருந்து வந்த நிலையில், தற்போது டைரக்டாகவே முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என விமர்சித்துள்ளார். பாஜகவுடன் இணக்கமான உறவை விரும்பும் எடப்பாடி பழனிசாமி கோபப்பட்டது ஏன் என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவை சீண்டும் விதமாக, தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் எனக் கூறினார். இது அதிமுகவினரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதுவரை அண்ணாமலை பற்றிய கேள்விகளுக்கு நாசூக்காக பதில் சொல்லி நகர்ந்து வந்த ஈபிஎஸ், அண்ணாமலையின் இந்தப் பேச்சால் சீறினார்.
அண்ணாமலையின் பேச்சும், அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆவேச எதிர்வினையும் அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
மேலிட ஆசீர்வாதம்? : பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை நேரடியாக விமர்சித்தது அவரது வழக்கத்திற்கு மாறான ஒன்று. கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோரை பேச வைத்துவிட்டு அமைதியாக இருப்பார் ஈபிஎஸ். ஆனால் அவரே அண்ணாமலைக்கு எதிராக ரியாக்ட் செய்திருப்பதற்குக் காரணம், அவரது பேச்சு எடப்பாடி பழனிசாமியை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. அண்ணாமலை இப்படி அதிமுகவுக்கு பிரஷர் கொடுத்து அதிக சீட் வாங்குவதற்காக மேலிடத்தின் ஆசீர்வாதத்தோடு பேசுகிறாரா?
அண்ணாமலை மீதும் ஆருத்ரா உள்ளிட்ட ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்கு சென்றிருக்கின்றன. அவர் பதவி பறிபோகலாம் என்ற சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில் தான் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவனாக, தைரியமான ஆளாக தன்னை வெளிக்காட்டுக்கொண்டு, அதிமுக கூட்டணி வேண்டாம் எனப் பேசியதால் தன்னை பலியாடாக ஆக்கிவிட்டார்கள் என அனுதாபம் பெறுவதற்கான ஸ்டாண்டை எடுக்கிறாரா என்பது ஒரு பாயிண்ட்.
எடப்பாடிக்கு சவால் : அண்ணாமலை, மாநிலத் தலைவர் பதவியில் நீடித்தார் என்றால், அவர் பேசுவதெல்லாம் அதிமுகவுக்கு பிரஷர் தருவதற்கான பேச்சு தான், அதனை தலைமை அங்கீகரிக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை பதவியில் நீடிக்கவில்லை என்றால், பாஜக தேசிய தலைமைக்கு இவர் மீது அதிருப்தி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டை ஆண்ட அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன், முடிந்தால் டெல்லிக்குப் போய் என்னை மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் அண்ணாமலை. அது எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுள்ள சவால். அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படப்போவது பற்றி அண்ணாமலைக்கு தெரிந்திருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை அவர்கள் பாஜக அரசை விமர்சிப்பதே கிடையாது. மாநில அரசை மட்டுமே குறை சொல்கிறார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தங்களுக்குப் பாதுகாப்பு என்பது அதிமுகவினரின் பாயிண்ட். ஆனால், அண்ணாமலை அதிமுகவினரை ஆத்திரப்படுத்துவதன் மூலமாக கூட்டணியில் இருந்து கழற்றிவிட நினைக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, டெல்லி தலைமையுடன் தான் கூட்டணி குறித்துப் பேசுவோம், மாநில தலைவர் இதில் முடிவெடுக்க முடியாது என்கிறாரே தவிர பாஜகவுடன் கூட்டணி இல்லை எனச் சொல்லவில்லை.

எடப்பாடி ஆத்திரம் : பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எடப்பாடிக்கு தெரியும். பாஜகவை தனியாக விடும் தைரியம் அதிமுகவிற்கு கிடையாது. பாஜகவே எங்களுக்கு தேவையில்லை என்ற இடத்தை நோக்கி எடப்பாடி பழனிசாமி நகரமாட்டார். இருவரும் தனித்திருந்தால் இருவருக்குமே லாபம் இல்லை. பாஜக – அதிமுக சேர்ந்து இருப்பது காலத்தின் கட்டாயம்.
தன்னை எதிர்க்கட்சித் தலைவர் போல முன்னிலைப்படுத்திக்கொண்டு ஆளுங்கட்சி மீதான ஊழல் புகார்களை அண்ணாமலை வெளியிடுவதால் அவர் மீது கோபத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. வெறும் 4 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி என்ற காரணத்திறாக 62 எம்.எல்.ஏக்கள் இருக்கும் கட்சியை ஓரங்கட்டிவிட்டு, மைலேஜ் பெறுவதால் அண்ணாமலை மீது ஈபிஎஸ் ஆத்திரத்தில் இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.