சென்னை: ரஜினி, விஜய், அஜித் உள்பட பெரிய நடிகர்கள் ஹைதராபாத்தில் சூட்டிங் செய்வதையே விரும்புகிறார்கள்.. இந்நிலையில் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அப்படி என்ன இருக்கிறது. ஏன் சென்னையில் பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு நடத்த முடிவதில்லை.
உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமான ராமோஜி பிலிம் சிட்டி போல் சென்னையில் திரைப்பட நகரம் அமைக்க முடியாதது ஏன்? இதற்கான காரணங்களை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் பெரிய நடிகர்களின் திரைப்பட படப்பிடிப்புகள் இப்போது பெரும்பாலும் தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள ராமேஜி பிலிம் சிட்டியில் தான் நடக்கின்றன. இதனால் இங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதேநேரம் திரைப்பட படப்பிடிப்புகள் நடத்துவதற்கான போதிய செட்டுகளோ அல்லது சரியான திரைப்பட நகரமே சென்னையில் உருவாக்கப்படவில்லை என்றும், இதனால் தான் தற்போது ஹைதராபாத் செல்வதாகவும் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்,
முன்பெல்லாம் தென்னிந்தியாவில் எந்த மொழியில் படம் எடுத்தாலும் சென்னையில் தான் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறும். ஏனெனில் அந்த அளவிற்கு இங்கு ஏராளமான சினிமா ஸ்டுடியோக்கள் இயக்கி வந்தன. ஏவிஎம், பிரசாத், வாகினி என பெரிய ஸ்டுடியோக்கள் இருந்தன. இப்போது அவற்றில் பல அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. இதனால் சினிமா எடுக்க விரும்புவோர், தற்போது பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புகள் அங்கு எடுப்பதை விட ஹைதராபாத்தையே விரும்புகிறார்கள்.
ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் (ஆர்எப்சி) தான் நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்கள் எடுக்கப்படுகின்றன. பாகுபலி தொடங்கி, பொன்னியின் செல்வன் வரை பல பிரம்மாண்ட படங்களின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டது. எல்லோரும் ராமோஜி பிலிம் சிட்டியை விரும்ப காரணம் என்ன தெரியுமா? இந்த திரைப்பட நகரம் உலகத்திலேயே மிகப்பெரியது. மலைகள், காடுகள், நட்சத்திர ஓட்டல்கள், ரயில் நிலையம், விமான நிலையம், குடியிருப்புகளின் செட்டுகள் என எல்லாமே உள்ள இருக்கிறது.
ஹாலிவுட்டில் உள்ளது போன்று திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் எனறு 1996ம் ஆண்டு ஈநாடு ஊடக அதிபர் ராமோஜி ராவ் ஆல் 1,666 ஏக்கர் (674 ஹெக்டேர் ) பரப்பளவில் அமைக்கப்பட்டது தான் இந்த ராமோஜி பிலிம் சிட்டி. இந்த ஸ்டுடியோவில் வெளிநாடுகளில் உள்ள கட்டிடங்கள் போன்ற செட்டுகள் உள்ளன. சென்னை சென்ரல் ரயில் நிலையத்தின் செட் உள்பட எந்த ரயில் நிலையத்தின் செட்டையும் அங்கு உடனே மாற்றி தருவார்கள்.
முக்கியமான விஷயம் சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்குள் பொதுமக்கள் யாருமே போக முடியாது. ஹைதராபாத்தின் புறநகர் பகுதியன் ஹயத்நகர் பகுதியில் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆர்எப்சி என அழைக்கப்படும் ராமோஜி பிலிம் சிட்டியின் மெயின் கேட்டில் இருந்து உள்ளே ஸ்டுடியோக்கள் அமைந்துள்ள பகுதி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த 8 கிலோ மீட்டர் தூரமும் பொதுமக்கள் செல்ல முடியாது. அங்கு காலியான தரமான சாலைகள், மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், பிரம்மாண்ட தெரு அரங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரண்மனை போன்ற வீடுகள், மிகப்பெரிய வீடுகள் என விஷயங்கள் செட்டாகவே உள்ளன. இது தவிர பல ஊர்களின் செட்டுகளும் நிரந்தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

துணை நடிகர்கள், நடிகர்களுடன் படக்குழு சென்றால் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பலாம். பொதுமக்கள் யாருமே வரமாட்டார்கள் என்பதால் படப்பிடிப்பு நடத்தும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதுவே பெரிய நடிகர்களின் படப்பிடிப்புகள் ராமோஜி பிலிம் சிட்டியில் நடத்தப்பட காரணம் ஆகும். அதுமட்டுமின்றி பெரிய நடிகர்கள் தங்க நட்சத்திர விடுதிகளும், கேரவன்களும் உள்ளன. பாகுபலி செட், பல படங்களில் காட்டப்படும் வீடுகள் அங்கு தான் இருக்கின்றன. பூங்காக்கள், தீம் பார்க்குகள் , பொழுதுபோக்கு சவாரிகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அஜித்தின் வீரம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, துணிவு என பல படங்கள் அங்குதான் எடுக்கப்பட்டன. அதேபோல் பீஸ்ட், வாரிசு என விஜய் நடித்த பல படங்கள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. ரஜினியின் அண்ணாத்த தற்போது நடைபெறும் ஜெயிலர் படமும், பொன்னியின் செல்வன் போன்ற பீரியாடிக் படமும் ஆர்எப்சியில் தான் எடுக்கப்பட்டன.
சரி ஏன் சென்னையில் இதுபோன்ற அமைக்கப்படவில்லை. ஆர்எப்சி மாதிரியான திரைப்பட நகரம் அமைக்க இயற்கையாகவே சென்னையில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. காடுகள், மலைகள், அடர்ந்த வனப்பகுதி என குறிப்பிடப்படும் பகுதிகள் சென்னையில் பெரிய அளவில் இல்லை. திரைப்பட நகரத்தை அங்கு குத்தகைக்கு எடுத்து அமைத்திருப்பது தனியார். அதுவும் இப்போது அல்ல, 1996களிலேயே அமைத்துவிட்டார்கள். இப்போது என்றால் ஹைதரபாத்தில்கூட அமைக்க முடியாது. அதேநேரம் சென்னை பையனூரில் 100 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது இந்த செட் அமைக்கப்பட்டால் ஓரளவு திரைப்படங்கள் சென்னையிலேயே எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது,