“அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம்” – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட சட்டம் – ஒழுங்கு, தற்போது திமுக ஆட்சியில் நிலைநாட்டப்பட்டு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.20) காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், “எதிர்க்கட்சித் தலைவர் தொடங்குகின்றபோதே 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது, நாங்களெல்லாம் இவ்வளவு நேரமாக இருந்து பேச வேண்டியிருக்கிறது என்று வருத்தப்பட்டார்கள். குறுக்கிட வேண்டாம் என்றுதான் நானும் கருதி இருந்தேன். நாளை பதில் சொல்கின்றபோது விளக்கமாக பதில் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது இரண்டு ஆண்டு காலமாக சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை அவர் இங்கே பதிவு செய்திருக்கிறார்.

நான், அவருக்கு தெரிவிக்க விரும்புவது, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் இன்றைக்கு தமிழக காவல் துறை மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஜல்லிக்கட்டு, மதுரை சித்திரைத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு நாள், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, திருவாரூர் தேர் திருவிழா என அனைத்து விழாக்களும் எவ்வளவு அமைதியாக, சுமுகமாக நடைபெற்றது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும்.

சாதி மோதல்கள், மத கலவரங்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு, கள்ளச் சாராய சாவு, இரயில் கொள்ளையர்கள், வட மாநில கொள்ளையர் அட்டகாசம், தொழிற்சாலை போராட்டங்கள் என வழக்கமான சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரையிலே அவைகளெல்லாம் முறையாக தடுக்கப்பட்டு, தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய பிரதமர் சமீபத்தில் 8-4-2023 அன்று சென்னை வந்தபோதும், குடியரசுத் தலைவர் 18-2-2023 அன்று கோவை வந்தபோதும், 18-3-2023 அன்று கன்னியாகுமரி வந்தபோதும், ஜனவரி மாதம் முதல் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஜி-20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றிடவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, மிகப் பெரிய பாராட்டுதல்களை இந்த காவல் துறை பெற்றிருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், முதன்முதலில் “ஆப்பரேஷன் ரவுடி வேட்டை” நடத்தப்பட்டு 6,112 பேர் கைது செய்யப்பட்டு, 3,047 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக, எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதில் இந்த அரசு எவ்வளவு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் ஓர் அடையாளம். இன்னும் சொல்லப் போகிறேன். இன்னும் தெளிவாக உங்களுக்கு புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், இதனால் 2020-ல் ஐ.பி.சி குற்றங்கள் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 696 ஆக இருந்து, 2022-ல் வெறும் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 97 வழக்குகளாக குறைந்துள்ளன.

2020-ல் 1 இலட்சத்து 68 ஆயிரத்து 629 மதுவிலக்குச் சட்டத்தின் கீழான வழக்குகள் 2022-ல் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 489 ஆக குறைந்திருக்கிறது.

  • 2019-ல் 1,678 ஆக இருந்த கொலைச் சம்பவங்கள் 2022-ல் 1,597 ஆக குறைந்திருக்கிறது.
  • 2018-ல் பெண், சிறுமி கடத்தல் 907 வழக்குகள். ஆனால், 2022-ல் அது 535 ஆக குறைந்திருக்கிறது.
  • 2018-ல் பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமை 55 வழக்குகள். ஆனால், 2022-ல் அது 29 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • 2018-ல் லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் 4,694. ஆனால், 2022-ல் இது 3,966 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக, கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன.

கொள்ளை, கன்னக்களவு எல்லா குற்றங்களுமே குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே, அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட சட்டம்-ஒழுங்கு திமுக ஆட்சியில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியாவிலேயே அனைவரும் விரும்பி வந்து வாழும் மாநிலமாகத் நம்முடைய தமிழகம் இன்றையதினம் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் திமுக ஆட்சி; அதற்குக் காரணம் இந்தத் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு இந்தக் காவல் துறைதான் சிறப்பான பணியை நிறைவேற்றித் தந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு தங்கள் மூலமாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.