சென்னையில் `Dakshin CII Summit 2023′ என்ற நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், பாசில் ஜோசப், ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்கள் குறித்தும் திரைத்துறைக் குறித்தும் பேசி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் இரண்டின் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னமிடம், “இந்திய சினிமா என்றாலே மேற்கு நாடுகளில் தொடர்ந்து இந்தி சினிமாதான் என்று குறிப்பிடப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த மணிரத்னம், “முதலில் திரையுலகை பாலிவுட் அல்லது கோலிவுட் என்று முத்திரைக் குத்துவதை நிறுத்த வேண்டும்.
இந்தி சினிமா துறையினர் தங்களை பாலிவுட் என்று அழைத்துக்கொள்வதை நிறுத்தினால் போதும், மக்களும் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அடையாளப்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். பின் இந்தி சினிமாதான் இந்தியாவின் சினிமா என்ற கருத்து தானாகவே மறைந்துவிடும் என்று மணிரத்னம் கூறியிருக்கிறார்.

மணிரத்னத்தைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நான் ஒன்றும் இந்த பாலிவுட், கோலிவுட் போன்ற ‘wood’-களின் ரசிகன் அல்ல. நாம் இவை அனைத்தையும் இந்தியாவின் சினிமா என்றுதான் பார்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.