புலிகேசி நகரில் ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு… கர்நாடகாவிலும் எடப்பாடிக்கு சவால்!

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது பேசுபொருளாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கர்நாடகாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு பின் அங்கு அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
இடையில் அதிகார போட்டி தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் கர்நாடகா பக்கம் கொஞ்சம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

புலிகேசி நகரில் அதிமுக போட்டி

விட்டதை பிடிக்க இருவருமே களமிறங்கியிருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பாளரை அறிவித்தார். புலிகேசி நகர் (159) சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் நிறுத்தப்பட்டார். தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையில் கூட்டணி தொடர்ந்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் கர்நாடகாவில் பாஜகவிற்கு போட்டியாக அதிமுக களமிறங்கியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சும்மா இருப்பாரா? ஈரோட்டில் ஏட்டிக்கு போட்டியாக ஒரு வேட்பாளரை நிறுத்தினாரே நினைவிருக்கிறதா? அதேபோல் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதே புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில மாணவர் அணி செயலாளர் எம்.நெடுஞ்செழியன் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக தேர்தல் ஆணையத்தின் முடிவு தெரிந்த பிறகே கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

OPS Candidate Karnataka Election

தேர்தல் ஆணையம் முடிவு

ஆனால் அதற்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சாதகமாக இல்லையெனில் என்ன செய்வார்? சுயேட்சையாக களமிறங்குவாரா? அப்படி நடந்தால் தனிச் சின்னத்திற்கு வாக்குகள் எப்படி கிடைக்கும். கர்நாடக வாழ் தமிழர்களுக்கு இரட்டை இலை தான் நன்கு பரீட்சயம். வேறு சின்னங்கள் பெரிதாக எடுபடாது. இந்த விஷயம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது.

எடப்பாடிக்கு நெருக்கடி

ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தன்னை ’கழக ஒருங்கினைப்பாளர்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். இதே விஷயத்தை தான் தேர்தல் ஆணையத்தில் முன்மொழிந்து எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை இலை யாருக்கு?

மறுபுறம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி தாக்கல் செய்த மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறது. இன்றைய தினம் முடிவை அறிவிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இரட்டை இலை எடப்பாடிக்கு கிடைக்குமா? இல்லை கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முடக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.