குவஹாத்தி: 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் ஆளும் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
1975-76ம் ஆண்டில் நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இருந்த ஆண்டுகள் இந்த எமர்ஜென்சி காலம்.
எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை மிகவும் உறுதியோடு எதிர்த்தம் மாநில்ங்களில் தமிழ்நாடு ஒன்று. அப்போது பாஜக எனும் கட்சி உருவாகவில்லை. ஜனசங்கம் என்ற பெயரில் அந்த கட்சியின் தலைவர்கள் இருந்தனர். பல்வேறு மாநில அரசியல் கட்சிகள், ஜனதா அமைப்புகள் எமர்ஜென்சியை எதிர்த்தன.
இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சியில் போலீசாரின் ஒடுக்குமுறைக்குள்ளானது முன்னாள் மேயர் சிட்டிபாபு சிறை டைரி குறிப்புகள் விவரித்திருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் உயிரைக் காப்பாற்றியவர் சிட்டிபாபு.
இந்த நிலையில் அஸ்ஸாமில் காங்கிரஸுக்கு எதிரான ஒருநடவடிக்கையாக ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 300 பேருக்கு மாதம் ரூ15,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓய்வூதியம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் உயிரிழந்திருந்தால் அவரது குடும்பத்துக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.