சென்னை: விஜய் நடிப்பில் 2021ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
விஜய் – லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
மேலும், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் லோகேஷின் பேச்சை நம்பி தான் ஏமாந்துவிட்டதாக நடிகர் சாந்தனு வேதனை தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் லோகேஷ் ஏமாற்றிவிட்டார் : கொரோனா ஊரடங்குக்கு பின்னர் திரையரங்குகளில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் மாஸ்டர். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் 2021 பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. 50 சதவித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகளுடன் ரிலீஸான மாஸ்டர், 200 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், நாசர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. விஜய் வாத்தி என்ற கேரக்டரிலும் விஜய் சேதுபதி பவானி என்ற வில்லனாகவும் மிரட்டியிருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாதியில் கல்லூரிக் காட்சிகள் அதிகம் உண்டு.
அதில், கல்லூரியில் விஜய்க்கு எதிராக செயல்படும் கேங்கின் லீடராக பார்கவ் என்ற கேரக்டரில் சாந்தனு நடித்திருந்தார். படத்தின் ஆரம்பத்தில் சாந்தனுவின் பார்கவ் கேரக்டரை வெயிட்டாக காட்டிவிட்டு, அதன்பிறகு புஷ்வானமாக்கிவிடுவார் லோகேஷ். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்தது பற்றியும் தனது கேரக்டர் குறித்தும், சாந்தனுவும் இதே வேதனையை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டிக் கொடுத்திருந்த சாந்தனு, லோகேஷ் கனகராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வெளிப்படையாகவே பேசியுள்ளார். மாஸ்டர் படத்திற்காக 30 நாட்கள் ஷூட்டிங் சென்றதாகவும், எனக்கு தனியாக சண்டை காட்சி, பாட்டு எல்லாம் எடுத்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் அண்ணா உடன் ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருந்தேன். இந்தப் படத்தில் நடித்தால் எனக்கு 40 நிமிடம் படத்தின் ஸ்க்ரீன் டைம் இருக்கும் என நம்பினேன்.

அதேபோல், மாஸ்டர் படம் மூலம் தற்போதைய இளம் தலைமுறை ரசிகர்களிடம் நான் பாப்புலர் ஆவேன் எனவும் நினைத்தேன். ஆனால் படம் பார்க்கும்போது தான் எனது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பது தெரிந்தது. வெறும் 12 நிமிடம் மட்டுமே திரையில் வருவேன், அது முன்னமே தெரிந்திருந்தால் நான் மாஸ்டர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பேட்டியே கொடுத்திருக்கமாட்டேன் என சாந்தனு வேதனையுடன் பேசியுள்ளார்.
மாஸ்டர் வெளியாகும் போது படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் சாந்தனு தொடர்ச்சியாக பங்கேற்றிருந்தார். இதனால், மாஸ்டர் படத்தில் சாந்தனுவின் கேரக்டரை அதிகம் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், படத்திலும் அவர் இறந்துவிடுவது போல தான் காட்சி அமைத்திருப்பார் லோகேஷ். லியோ படத்திலும் மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்து வரும் நிலையில், சாந்தனு இப்படி வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.