காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றன. கல்வி உள்பட பல அடிப்படை விஷயங்களிலும் கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் புதிதாக தடை போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து உள்நாட்டை போரை தாலிபான்கள் தொடங்கி ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு வசிக்கும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றன.
அதாவது தாலிபான்கள் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது பெண்களை பொதுவெளியில் நடமாட விடாமல் தடுப்பது, கல்வி நிறுவனங்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்துதல், பணிக்கு செல்ல தடை விதித்தில் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதோடு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூடும் வகையிலான புர்கா அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மாகாணங்களில் பெண்கள் ஓட்டல்களில் சாப்பிட கூட தடை உள்ளது. இதுதவிர லைசென்ஸ் எடுக்க தடை, உயர்படிப்புக்கு வெளிநாடு செல்ல தடை, ஜிம், பூங்கா, பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல தடை என எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான தடைகள் தான் தாண்டவமாடுகிறது. இதனால் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட தாலிபான்கள் மட்டும் தங்களின் கொள்கைகளில் இருந்து விலகவே இல்லை. இந்நிலையில் தான் தற்போது ஆப்கானிஸ்தானின் 2 மாகாணங்களில் பெண்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானிலும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தான் அதுதொடர்பாக பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பாக்லான் மகாணம் மற்றும் வடகிழக்கு மாகாணமாக உள்ள தாஹர் ஆகிய இடங்களில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க கூடாது என தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு என்பது அந்த 2 மாகாணங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற மாகாணங்களில் அந்த உத்தரவு பொருந்தாது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு வடமேற்கு பகுதியான ஹெராத் மகாணத்தில் பசுமையான தோற்றம் கொண்ட உணவங்களுக்கு பெண்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாக்லான், தாஹர் மாகாணங்களில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாக்லான் மற்றும் தாஹர் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பெண்கள் வெளிவருவதை தடுக்க ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு விடை என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நடமாட பெண்களுக்கு தடை உள்ளது. ஆனால் தற்போது ரம்ஜான் கொண்டாட்டத்தை காரணம் காட்டி அவர்கள் வெளிவர கூடும் என்பதால் அதனை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக கல்லூரிகளில் மாணவிகள் கல்வி கற்க சில மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி கேட்டபோது கல்லூரிகளில் ஆண்களுடன் மாணவிகள் பேசுகின்றனர். மேலும் ஆடை கட்டுப்பாடுகளை மறந்து மாணவிகள் திருமண விழாவுக்கு செல்வது போல் கல்லூரி சென்று வருகின்றனர். இதனால் மாணவிகளுக்கு கல்லூரி, பல்கலைக்கழங்களில் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த பாணியில் தான் தற்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையில் 2 மாகாணங்களில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.