மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. சமீப காலமாக இந்த காலிஸ்தான் கோரிக்கையை’வாரிஸ் பஞ்சாப் டி’யின் தலைவராக செயல்பட்டு வரும் அம்ரித்பால் சிங் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.
அம்ரித்பால் ஒரு மாத காலமாக பல்வேறு வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலத்தின் போலீசாரால் கடந்த ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் மோகா போலீசாரிடம் அம்ரித்பால் சிங் சரண் அடைந்தார்.
அம்ரித்பால் சிங் மோகா போலீசாரிடம் சரண் அடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் திப்ருகார் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது. அவரது உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.