சென்னை: தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது.
2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ‘Made in Tamil Nadu’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
மீட்டிங்:இதற்கு முன்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது.
மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக 99 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மொத்தமாக 93 நிறுவனங்கள் முதலீடுகளையும், திட்டங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இன்று மேற்கொண்டு உள்ளன. இந்த முதலீடு செய்த் நிறுவனங்கள் பல தங்கள் தொழில்களை ஏற்கனவே தொடங்கிவிட்டன. இன்னும் சில நிறுவனங்கள் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணிகளை முடிந்துவிட்டது.
கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோவைக்கும், ஓசூருக்கும், சில தெற்கு மாவட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக கோவையில் டெக் மஹிந்திரா முறையாக தங்கள் கிளையை துவங்க உள்ளது. இதன் மூலம் அங்கு 1500 பேருக்கு வேலை கிடைக்கும். அதேபோல் ரோல்ஸ் ராய்ஸ், எச்ஏஎல் இணைந்து IAMPL என்று கூட்டு நிறுவனம் மூலம் விமான உதிரி பாகங்களை செய்ய உள்ளன.
இந்த நிறுவனம் ஓசூரில் தொடங்கப்பட உள்ளது. எல் அண்ட் டி மூலம் 1500 கோடி ரூபாய்க்கு கோவையில் புதிய ஐடி பார்க்க தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த டிரோன் நிறுவனமான கருடா நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு தனது கிளையை கோவையில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அதேபோல் MWIVEN என்ற நிறுவனம் ஏவுகணை தயாரிப்பு உதிரி பாகங்களை உருவாக்கும் நிறுவனத்தை ஓசூரில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில்தான் அடுத்த வருடமும் தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை அல்லது கோவையில் இந்த மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது