
இந்தியாவில் உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதற்கு, முடிவு செய்து உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அனைவரும் ஒன்றையே சார்ந்திருக்கும் நிலையை தவிர்க்க முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் மெட்ரோ இணைப்பை விரிவாக்கம் செய்து வரும் நிகழ்வை எடுத்துக்காட்டாக கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன்படி, நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டம் கேரளாவில் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலம் இயற்கை வளங்களை கொண்டது. நீர்நிலைகளும் அதிகம் நிறைந்தது.
இந்த நிலையில், கொச்சி நகருக்கு அதிக பயனளிக்கும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீர் வழியேயான இந்த மெட்ரோ பயண திட்டம், சவுகரியம், வசதி, பாதுகாப்பு, நேரந்தவறாமை, நம்பக தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தன்மை உள்ளிட்ட பிற மெட்ரோ பயண திட்டங்களில் உள்ளது போன்ற விசயங்களை கொண்டது. அதே அனுபவம் அளிக்க கூடியது. பயணம் செய்வதும் எளிது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இதன்படி அவரது சுற்றுப்பயணம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு அவர் செல்கிறார். ரேவா நகரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதன்பின்பு, ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கிறார். பின்னர், தென்னிந்திய பகுதியான கேரளாவுக்கு அடுத்த நாள் காலை (25-ந்தேதி) 10.30 மணியளவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அவருடைய இந்த பயணத்தில், 7 வெவ்வேறு நகரங்களுக்கு சென்று 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார். 36 மணிநேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5,300 கி.மீ. தொலைவுக்கு அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.