சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை சாய் பல்லவி.
தமிழில் நடிகர் தனுஷுடன் நடித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் நடிப்புலகிற்கு தன்னுடைய என்ட்ரியை கொடுத்த நடிகை சாய் பல்லவி, தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சிம்ரனை பாராட்டிய சாய் பல்லவி : மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் நடிப்பிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாய் பல்லவி. இந்தப் படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கு. மலையாள மொழிகளில் அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகின. ஒரு டாக்டராக இருந்த போதிலும், நடிப்பின்மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தமிழில் தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்து தன்னுடைய நடனத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற சாய் பல்லவி, தொடர்ந்து கார்கி போன்ற படங்களின்மூலம் சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய இயல்பான நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்து வருபவர் சாய் பல்லவி. நடனக் கலைஞரான இவர், தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய நடிப்புடன் நடனமும் அனைவரையும் கவரும்வகையில் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனமுடன் காணப்படுகிறார். முன்னதாக தாம் தூம், கஸ்தூரி மான் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில், தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, சிம்ரனின் படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது தான் நடிகையானால், சிம்ரனை போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சாய் பல்லவியின் இந்த பேட்டியை பார்த்த சிம்ரன், நெகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
90களில் தமிழ் சினிமாவின் முக்கியமான நாயகியாக இருந்தவர் நடிகை சிம்ரன். நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, பிரஷாந்த் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன், விஜய்காந்த், சரத்குமார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடனும் நடித்தவர். இடையழகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிம்ரன், தற்போது தன்னுடைய 47வது வயதிலும் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.