சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ படத்தில் கமல் ஹாசன் பட ஃபார்முலாவை லோகேஷ் கனகராஜ் ஃபாலோ செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
லியோ ஷூட்டிங்: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வழக்கமான மேக்கிங் வீடியோவாக இல்லாமல், படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை பையனூரில் ஷூட்டிங் நடந்துவருவதாகவும், அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

அடுத்தது எங்கு ஷூட்டிங்: பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு லியோ படக்குழு மீண்டும் ஸ்டூடியோவுக்குள் ஷூட்டிங்கை தொடங்குகிறது. அதன்படி ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் செட் போடும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இந்த செட்டில்தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான காட்சிகள் படமாக்கப்படும் என்ற புதிய தகவலும் சில நாட்களாக உலாவிவருகிறது. அதுமட்டுமின்றி விஜய்யும் அந்த செட்டில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2000 டான்ஸர்கள்: இந்நிலையில் லியோ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தில் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடைபெறவிருக்கிறது. அதாவது அந்தப் பாடலுக்கு 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார்களாம். அதற்காக மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நடன கலைஞர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்கிறார்.

கமல் ஃபார்முலா?: கமல் ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பது அனைவரும் அறிந்தது. லியோவில் படமாக்கப்படவிருக்கும் பாடலானது இந்தியனில் இடம்பெற்ற கப்பலேறி போயாச்சு பாடலில் இருக்கும் பிரமாண்டத்தோடு படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களில் சிலர் லியோ பாடலில் கமல் ஹாசனின் ஃபார்முலாவை பின்பற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ் என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.