வில்லி ஆனார் சோனியா அகர்வால்

'காதல் கொண்டேன்' படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் பின்பு விவாகரத்து செய்து பிரிந்தார். மீண்டும் நடிக்கத் தொடங்கிய அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 'உன்னால் என்னால்' என்ற படத்தில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்குகிறர்.

இதில் ஜெகா, கே.ஆர். ஜெயகிருஷ்ணா, உமேஷ், டெல்லி கணேஷ், ஆர்.சுந்தரராஜன், மோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். இதில் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். சோனியா அகர்வால் வில்லியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் ஜெயகிருஷ்ணா கூறியதாவது: வறுமையின் காரணமாக கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை தீர்ந்து போகும் ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்புக்குப் பின்னணியில் ஓர் அநீதி இருப்பதைக் காண்கிறார்கள். அது இவர்களை மனசாட்சிக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தும் நபரின் வாய்ப்பு என்று தெரிகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வறுமையைப் போக்க சமரசப் பட்டார்களா? அல்லது மனசாட்சி, மனித நேயம் தான் முக்கியம் என்று முடிவு எடுத்தார்களா? என்பதைப் பற்றிப் பேசும் படம்.

பெரிய அநீதி இழைக்கும் ஒரு துறையாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இதில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் பலர் உண்டு. இடைத்தரகர்களைக் கொண்டு சக மனிதரை எப்படி அதில் ஏமாற்றுகிறார்கள்? தங்கள் சதி வலையில் சிக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம். உலகளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த ரியல் எஸ்டேட் உலகத்தின் கறுப்புப் பக்கங்களை இதில் புரட்டிக் காட்டியிருக்கிறோம். மனிதன் எவ்வளவு சாதித்தாலும் தனது மனசாட்சிக்கு உட்பட்டு மனிதநேயத்தோடு வாழ்வதுதான் சிறந்த அறம் என்று இப்படத்தில் கூறி இருக்கிறோம். என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.