கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று ஆஜராக உத்தரவிட்டு அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் 5வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அசோக் குமாருக்கு சொந்தமாக கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அபெக்ஸ் நிறுவன அலுவலகத்துக்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வந்தனர்.
அபெக்ஸ் நிறுவன அலுவலக கதவுகள் திறக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அசோக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் அசோக் குமார் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சம்மன் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இதையடுத்து, நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டு அசோக் குமார் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது நாளாக ஐடி ரெய்டு தொடர்ந்து வருவதும், வருமான வரி அதிகாரிகள் அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளதும் கரூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.