மும்பை:
தனது பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்குமே தற்போது ஒரு புதிய கலாச்சாரம் பரவி வருகிறது. பிறந்தநாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த வேண்டும்; கேக் வெட்டுகிறோம் என்ற பெயரில் அதனை நண்பர்கள் முகத்தில் அடிக்க வேண்டும்; யாருக்கு பிறந்தநாளோ அவரை அனைவரும் சேர்ந்து தாக்க வேண்டும் என்கிற மனநிலையில்தான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.
என்ஜாய் பண்ணுகிறோம் என நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் காரியம் பல சமயங்களில் ஆபத்தாகி விடுவதையும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவனை அவனது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் அவன் உயிரிழந்தான். அந்த வகையில் தற்போது மும்பையில் ஒரு பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது.
பிறந்தநாள் ‘ட்ரீட்’:
மும்பையில் உள்ள கோவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சபீர். 20 வயது ஆகிறது. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரயில் நண்பர்கள் அதிகம். இதனிடையே, கடந்த 1-ம் தேதி சபீருக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதன் காரணமாக அதற்கு முந்தைய தினம் இரவு நண்பர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார் சபீர். இதற்காக தங்கள் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சபீர் மற்றும் அவரது 4 நண்பர்கள் சென்றுள்ளனர்.
10 ஆயிரம் பில்:
அங்கு சபீரின் நண்பர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சபீர் தன்னிடம் ரூ.2 ஆயிரம்தான் இருக்கிறது; அதற்குள் ஆர்டர் செய்யுங்கள் என்ற சொன்ன போதும் அவர்கள் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடைசியில் ரூ.10 ஆயிரத்துக்கு பில் வந்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் சபீர் தனது வாட்ச் மற்றும் மோதிரத்தை அடமானம் வைத்து 10 ஆயிரம் ரூபாயை புரட்டி ஓட்டலுக்கு கொடுத்துள்ளார்.
தீர்த்துகட்ட முடிவு:
ஓட்டலை விட்டு வெளியே வந்ததும், இதை வைத்து சபீரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சபீர் அவர்களை திட்ட, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஆகியுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த தினமான ஜூன் 1 தனது பிறந்தநாளன்று சபீர் தனதுக்கு வீட்டுக்கு அருகே உள்ள நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
இறந்தநாளாக மாறிய சோகம்:
அப்போது சபீருடன் சண்டை போட்ட ஷாருக், நிஸார் உட்பட 4 பேர் வந்தனர். ஏதோ தன்னிடம் மன்னிப்பு கேட்கதான் அவர்கள் வருகிறார்கள் என சபீர் நினைத்திருந்த நிலையில், தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சபீர் உயிரிழந்தார்.
கைது நடவடிக்கை:
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஷாருக் (21), நிஸார் (20) ஆகியோரை கைது செய்தனர். மீதமுள்ள 2 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீய நண்பர்களின் சகவாசத்தால் தனது பிறந்தாளிலேயே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.