ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன்: கடந்த 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அவர் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ட்ரம்பின் வீடு, அலுவலகங்களில் எப்பிஐ புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11,000 அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 100 ஆவணங்கள், அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் ஆகும்.

இதன்பேரில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்காவின் மியாமி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த பிரிவுகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை மியாமி நீதிமன்றத்தில் ட்ரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக ட்ரம்ப் மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற விவகார வழக்கிலும் அவர் சிக்கியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வழக்குகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.