இலங்கை | 801 கிராம் எடை கொண்ட சிறுநீரகக் கல்லை அகற்றிய மருத்துவர்கள்; கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பு

கொழும்பு: இலங்கையை சேர்ந்த நோயாளி ஒருவரின் உடலில் இருந்து பேஸ்பால் அளவை காட்டிலும் சற்று பெரிய அளவிலான சிறுநீரகக் கல்லை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சிகிச்சையை இந்த மாதத்தின் தொடக்கத்தில் மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இந்த சிறுநீரகக் கல் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட சிறுநீரகக் கல் என கின்னஸ் உலக சாதனையிலும் இடம் பிடித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 62 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தான் அந்த நோயாளி. அவரது உடலில் இருந்து 13.372 சென்டிமீட்டர் நீளமும், 10.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளது. இதன் எடை 801 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த கல்லின் அளவு அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள கொழும்பு ராணுவ மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு இந்த கல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ‘உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட சிறுநீரகக் கல்’ என இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2004-ல் இந்தியாவில் 13 சென்டிமீட்டர் நீளத்தில் சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளது. அது உலகின் நீளமான சிறுநீரகக் கல் என கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்திருந்தது. அதே போல கடந்த 2008-ல் பாகிஸ்தானில் 620 கிராம் எடையில் சிறுநீரகக் கல் அகற்றப்பட்டது. அது உலகின் அதிக எடை கொண்ட சிறுநீரகக் கல் என கின்னஸ் சாதனையில் இதற்கு முன்னர் இடம் பெற்றிருந்தது. இது கின்னஸ் உலக சாதனை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரகக் கல் என்பது திடமான ஒரு பொருளாகும். இது சிறுநீரில் அதிக அளவு தாதுக்கள் இருக்கும்போது ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களிலும் உருவாகலாம். இயற்கையாகவே இந்த கற்கள் சிறிதாக இருக்கும் போது சிறுநீர் பாதை வழியே வெளியேறிவிடும். கல் பெரிதாக இருந்தால் முதுகு, அடிவயிறு, இடுப்பு பகுதியில் வலி ஏற்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவ சிகிச்சை மூலம் அந்தக் கற்களை உடைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். அது பலன் கொடுக்கவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

— Guinness World Records (@GWR) June 15, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.