ஒரு நாட்டின் புத்தெழுச்சிக்கு கைத்தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது – பிரதமர் தினேஷ் குணவர்தன.

தேசிய கைத்தொழில் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்ற Industry 2023 தேசிய கைத்தொழில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய கைத்தொழில் வாரத்துடன் இணைந்ததாக இந்த கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. கண்காட்சியுடன் இணைந்ததாக பிரதமர் தலைமையில் நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டதுடன், கைத்தொழில்துறை பாதுகாப்பு நிதியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கைத்தொழில் துறையின் வளர்ச்சியில், எமது பாரம்பரிய தொழில்கள் மற்றும் உள்நாட்டில் பரந்துபட்டுள்ள கலப்பு கைத்தொழில் முறைகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம். அதேபோல் வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய பலமாக மாற்றப்பட்ட பல கைத்தொழில்கள் தற்போது தனியார் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அரச துறையும் இதே போன்ற அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும்.

இரும்பு மற்றும் உருக்குக் கைத்தொழில் பல கைத்தொழில்மயமான நாடுகளின் அடிப்படையாகும். இரும்பு மற்றும் உருக்கு கைத்தொழில்துறையை பலமான முறையில் உற்பத்திகளாக மாற்ற முடிந்த அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து பாரிய தொழில்மயமாக்கலுக்கு பரினாமம் அடைந்தன. கைத்தொழில் துறை வளர்ச்சி என்பது மிகத் தெளிவான அடிப்படையில் ஒரு திட்டத்துடன் பிரவேசிக்க வேண்டும். சர்வதேச அளவில் எங்களுக்கு போட்டி உள்ளது. அந்த போட்டியின் மூலமே வெளிநாட்டு சந்தையை அடைய முடியும். இதற்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் அறிவு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் தேவை என்பதை பெரும்பாலான கைத்தொழிற் துறையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டின் தொழில்துறைகளுக்கு பாதுகாப்பையும் வலிமையையும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

எங்கள் சந்தை வரையறுக்கப்பட்டுள்ளது. பெரிய சந்தைகளுடன் போட்டியிடுவதில், செலவுகளைக் குறைக்கவும், உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். நாம் எதிர்கொண்ட நெருக்கடியான காலகட்டத்தை மாற்றி புதிய காலகட்டத்திற்குள் நுழைய முடியும் என்பதில் எமது நாடு நம்பிக்கைக் கொண்டிருத்தது.

நாம் தேயிலை, இரப்பர், தென்னை ஏற்றுமதி செய்கிறோம் என்று நூறு வருடங்களாகப் பேசி வந்தோம். இப்போது அது மாறி வருகிறது. அதை மாற்ற வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 1970 களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்துடன் அத்தகைய மாற்றத்தின் ஆரம்பம் ஏற்பட்டது. கைத்தொழில் துறை அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விசேட துறைகளுக்கு பிரவேசிக்க சந்தை நிலைமைகள் தளர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். ஒப்பந்தங்களைச் செய்வதன் மூலம் சந்தை நிலைமையை தளர்த்தி அவற்றில் பிரவேசிக்க முடியுமானால், அதற்கான முயற்சி கைத்தொழில் துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பாக அமையும். ஒரு நாட்டின் புத்தெழுச்சிக்கு கைத்தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அடிப்படையில் இத்தகையதொரு கண்காட்சியை நடத்துவதில் ஒரு நாடாக நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.

அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத், பிரசன்ன ரணவீர ஆகியோரும் இங்கு உரையாற்றியதுடன், இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, விஜித பேருகொட, ஜனக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம்.பெளசி, வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பொது மற்றும் தனியார் துறை தொழில்துறையினர் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.