’டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் விபத்து | பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்ததா ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர்?

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஆழ்கடலுக்கு சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘தி சிம்ப்ஸன்ஸ்; தொடர் கணித்திருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1912ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதற்காக ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பயணத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 கோடீஸ்வரர்கள் பங்கேற்றனர். டைட்டன் நீர்மூழ்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் தொடங்கிய 1.45 மணி நேரத்தில் நீர்மூழ்கியுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டானது. இதற்கிடையே நீண்ட தேடுதல் பணிக்குப் பிறகு, 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து இருக்கலாம் என்று ஓசன்கேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடரில் காட்டப்பட்டிருப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2006ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தொடரின் 17வது சீசனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் 10வது எபிசோடில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய ‘Piso Mojado’ என்ற கப்பலில் இருக்கும் பொக்கிஷங்களை எடுப்பதற்காக நாயகன் ஹோமர் சிம்ப்ஸன் தனது தந்தையுடன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறார். பவளப் பாறை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் நீர்மூழ்கிக் கப்பலில் ஆக்ஸிஜன் குறைந்து ஹோமர் அதில் மாட்டிக் கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. ஆச்சர்யமூட்டும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானில் இருந்து இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட ஷாஜதா தாவூத் மற்றும் மகன் சுலேமான் தாவூத் இருவரும் தந்தையும் மகனும் ஆவர். நெட்டிசன்கள் இந்த விபத்தை ‘சிம்ப்ஸன்ஸ்’ தொடருடன் ஒப்பிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதே போல ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தொடர், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆவது குறித்தும், ரஷ்யா – உக்ரைன் போர், கொரோனா வைரஸ் ஆகியவை குறித்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.