திருவண்ணாமலையில் எஸ்.சி. சமூக மக்களுக்கு இத்தனை கொடுமைகளா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தீண்டாமை வன்கொடுமைகள் சம்பவங்களை

தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. அதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் மிக மோசமான வகையில் தீண்டாமை வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை கடைபிடிப்பு, துணி சலவை செய்ய மறுப்பு, கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க மறுப்பு, பள்ளியில் பட்டியலின மாணவர்களை தூர நிற்க வைப்பது, பட்டியலின மக்கள் பகுதியில் தூய்மைப் பணிகள் செய்ய மறுப்பு போன்ற வகைகளில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இவ்வூரில் பட்டியலின மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் அடுத்தவர் பட்டா நிலத்தில் செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இங்கு உள்ள பெருமாள் அப்பன் கோவில் வழியாக செல்லவோ, அங்கு வழிபடவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றனர்.

அதே போல, திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகில் செல்லங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட பிற சமூகத்தைச் சார்ந்தவர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து தங்கராஜ் என்ற தலித் இளைஞர் வழிபடுதல் உரிமைக்காக அதிகாரிகளிடம் மனுக் கொடுத்து நடந்த பேச்சுவார்த்தையை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் கடந்த 17.6.2023 அன்று தங்கராஜையும், பிறரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீண்டாமை வன்கொடுமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மோத்தக்கல், செல்லங்குப்பம் ஆகிய கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை முற்றிலும் அகற்றிடுவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும், தீண்டாமை வன்கொடுமையை கடைபிடிப்பவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

வலியுறுத்துகிறது. மேலும், பட்டியலின மக்களின் கோவில் வழிபாட்டு உரிமையையும், சாதிய பாகுபாடுகளை களையவும், சுடுகாட்டு பாதை உள்ளிட்ட தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது’ என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.