துக்கத்துடன் வரும் மக்களை சங்கடப்படுத்தலாமா? இறையன்பு கொடுத்த அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் உள்ள மயானங்கள் மற்றும் சுடுகாடுகள் அமைந்துள்ள பகுதி களை சீரமைத்து பசுமை மயானபூமிகளாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள மயான பூமிகள் மற்றும் சுடுகாடுகளை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும், துக்கத்துடன் வரும் பொதுமக்களுக்கு சங்கடம் ஏற்படுத்தக் கூடாது என்பதில் அரசு முனைப்புடன் உள்ளது. எனவே, சுடுகாடுகளை நன்றாகவும், எந்த பிரச்சினையும் இன்றி பராமரிக்க வேண்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மயான பூமிகள் மற்றும் சுடுகாடுகள் சரியாக பராமரிக்கப்படாமலும், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையிலும் உள்ளன. குறிப்பாக, அதிக அளவில் மரணங்கள் நிகழும் நகரப் பகுதிகளில் இந்த நிலை உள்ளது. எனவே, மயான பூமிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், பூச்செடிகள், மரங்கள் நடுவதுடன் தண்ணீர் வசதி மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு கூரையுடன் கூடிய பகுதிகளை அமைத்து பசுமை மயான பூமிகளை உருவாக்க வேண்டும்.

தன்னார்வ சேவை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் சேவைகளை இந்த திட்டத்துக்கு பயன்படுத்தி, வசதிகளை ஏற்படுத்தலாம். இதன்மூலம் மயான பூமிகள் மற்றும் சுடுகாடுகளின் ஒட்டுமொத்த சூழல் மேம்படுவதுடன், பிரிந்த ஆத்மாக்களுடன் அங்கு வரும் பொதுமக்களுக்கும் நிம்மதியாக இருக்கும். எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி மயானபூமியை உருவாக்கி, மற்றவர்களும் இதேபோன்று செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். இது நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.