வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அணி கடும் சர்ச்சையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கும் பிசிசிஐ, கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி டிராபியில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்த சர்பிராஸ்கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி பரிசீலிக்கக்கூடவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பேசும்போது, எந்த அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை புறக்கணித்துவிட்டு, ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய வீரர்களை டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது எந்தமாதிரியான அணுகுமுறை என்று தெரியவில்லை. பிசிசிஐ தேர்வுக்குழுவின் தேர்வு அதிருப்தியாக இருக்கிறது. தவறான முன்னுதாரணத்தை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கடுமையாக விளாசியிருக்கிறார்.
பிசிசிஐ தற்காலிக தேர்வுக்குழு தலைவராக சிவ் சுந்தர் இருக்கிறார். அவரது தலைமையிலான குழு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ்கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோருக்கு இந்த தொடரில் நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத பல்வேறு டிவிஸ்டுகளுடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடாத புஜாரா நீக்கப்பட்டிருக்கிறார்.
ஹனுமா விஹாரி, அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் சர்பிராஸ்கான் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஒப்பிடும்போது சிறப்பான ரெக்கார்டுகளை சர்பிராஸ்கான் வைத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சராசரியை கொண்டிருக்கிறார் இவர். அதேபோல் ஹனுமா விஹாரியும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் முதுக்கெலும்பாக இருந்தார். ஆனால் இவர்களை கடந்து ஐபிஎல் கோட்டா மூலம் ருதுராஜ்ஜூக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது திறமையான வீரர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்போது, சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருக்கும் சர்பிராஸ்கானுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது எந்த அடிப்படையில். கடந்த 3 சீசன்களாக அபாரமாக ஆடிக் கொண்டிருக்கிறார். பிளேயிங் லெவனில் இல்லாவிட்டாலும், 15 பேர் கொண்ட அணியிலாவது அவர் பெயர் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரஞ்சி டிராபி விளையாடாதீர்கள், ஐபிஎல் விளையாடுங்கள் அணியில் இடம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்கள் அதற்கு தயாராகிவிடுவார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக சாடியுள்ளார்.