கோவை: வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் பெரிய உருவமுடைய ஒற்றை ஆண் யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை உண்பதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் வாயில் காயத்துடன் இந்த யானை செல்வதை வனப் பணியாளர்கள் நேற்றுமுன்தினம் கவனித்துள்ளனர். இதையடுத்து, யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிய யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:
யானை தற்போது வேகமாக நகர்ந்து சென்று வருகிறது. எனவே, எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அது வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் மயக்க ஊசி செலுத்த ஏற்ற இடத்தை ஆய்வு செய்து வருகிறோம். சரியான இடத்துக்கு யானை வரும்போது மயக்கஊசி செலுத்தி யானை பிடிக்கப்படும். இதற்காக மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த பணிக்கு உதவுவதற்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வந்துள்ளன.
யானை சரியாக உணவு உட்கொள்கிறதா, தண்ணீர் அருந்துகிறதா என்பதையும் வீடியோ பதிவு மூலம் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. அது இல்லாதபட்சத்தில் உடனடி சிகிச்சை தேவைப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.