திருப்பதி: திருப்பதி அலிபிரி நடைபாதையில், 3 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதன் எதிரொலியாக, பக்தர்கள் குழுவாகச் செல்ல திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, அலிபிரி நடைபாதையில் ஆந்திராவின் கர்னுால் மாவட்டம், ஆதோனியைச் சேர்ந்த ஆறு பேர் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றனர்.
இதில், 3 வயது சிறுவன் கவுசிக்கை, வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது.
உறவினர்கள் மற்றும் பக்தர்கள் காயமடைந்த சிறுவனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தை, தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது:
சிறுத்தை தாக்கியதில் சிறுவனுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. அப்போது பக்தர்கள் கூச்சலிட்டதால், சிறுத்தை சிறுவனை விட்டு தப்பிச் சென்றது.
அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அலிபிரியில் உள்ள காளி கோபுரத்தில் இருந்து, நரசிம்ம சுவாமி கோவில் வரையில் சிறுத்தை நடமாடுவது தெரிய வந்துள்ளது. விரைவில் அதை பிடிப்போம்.
இதையடுத்து, அலிபிரி நடைபாதையில் இரவு 7:00 மணிக்கு மேல், காளி கோபுரம் பகுதியில் இருந்து, 200 பக்தர்கள் வீதம் குழுவாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன் ஒரு பாதுகாவலரும் உடனிருப்பார். மேலும், தங்களுடன் வரும் குழந்தைகளை, பக்தர்கள் குழுவின் நடுவே வைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் மாலை 6:00 மணி வரையிலும், அலிபிரி நடைபாதையில் இரவு 10:00 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்