பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பயணிகள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவில் பெருநகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. டிராபிக்கை குறைக்க அனைத்து பெரு நகரங்களும் மெட்ரோவுக்கு முக்கியத்துவம் தருகிறது. சென்னையில் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே தென்னிந்தியாவில் மற்றொரு முக்கிய நகரமாகப் பெங்களூரிலும் மெட்ரோ சேவை படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வருகிறது. இதற்கிடையே இரண்டிற்கும் இடையேயான ஒப்பீடும் ஆரம்பித்துள்ளது.
மெட்ரோ: சென்னை மெட்ரோ இப்போது பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களைக் குறிவைத்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முன்கூட்டியே மொத்தமாக டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் க்யூஆர் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்யலாம். இதை ஊழியர்களுக்கு தங்கள் பயணத்திற்கு முன்பு பயன்படுத்திக் கொள்ளலாம். டிக்கெட் நுழைவாயிலில், அந்த க்யூஆர் கோடை காட்டினால் போதும் உள்ளே சென்றுவிடலாம். ஐடி உள்ளிட்ட பெரு நிறுவன ஊழியர்களை மெட்ரோவில் பயணிக்க ஊக்குவிக்கவே சென்னை மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெங்களூர் மெட்ரோ: தென்னிந்தியாவில் மற்றொரு முக்கிய நகரமாக இருக்கும் பெங்களூரும் இப்போது அதிகரித்து வரும் டிராபிக் பிரச்சினையால் திக்குமுக்காடி வருகிறது. பெங்களூரிலும் ஐடி உள்ளிட்ட பெருநிறுவன ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பதை ஊக்குவிக்க இதுபோன்ற திட்டங்கள் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் ஒரு சோதனை ஓட்டத்தை நடத்தியது.. கார்ப்பரேட் நிறுவனம் தனது ஆபீஸ் நிகழ்ச்சிகளுக்காக அதிகபட்சம் 5,000 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம் என்ற திட்டத்தைச் சோதனை செய்துள்ளது. இது வெற்றிகரமாகவும் இருந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அழைப்பிதழிலேயே கூட டிக்கெட் க்யூஆர் கோட்களை பகிர முடியும். இதன் மூலம் பயணம் குறித்த தலைவலி இல்லாமல் ஊழியர்களும் ஈஸியாக பயணிக்கலாம்.
ஏன் முக்கியம்: இது குறித்து ஐடி ஊழியர் சஞ்சனா ராவ் கூறுகையில், “எங்களில் பலர் ஏற்கனவே மெட்ரோவில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், இன்னும் சிலர் மெட்ரோவை பயன்படுத்துவதில்லை. இந்த நேரத்தில் நிறுவனமே சிறப்பு நிகழ்ச்சிகள் சமயத்தில் டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் அது சில ஊழியர்கள் மெட்ரோவில் பயணித்துப் பார்க்க ஒரு வாய்ப்பை கொடுக்கும்.
மெட்ரோ வசதியாக இருந்தால், தொடர்ந்து அவர்கள் மெட்ரோவிலேயே பயணிப்பார்கள். இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு டாக்ஸி வழங்கி வருகிறது. அதற்குப் பதிலாக மெட்ரோ பயணத்தைக் கூட வரும் காலத்தில் அவர்கள் ஊக்குவிதக்காலம்” என்றார்.
என்ன சிக்கல்: சென்னையை போலவே பெங்களூர் மெட்ரோவும் ஐடி ஊழியர்கள் மெட்ரோவில் பயணிப்பதை ஊக்குவிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர் இருப்பினும், அதில் ஒரு சிக்கல் இருக்கவே செய்கிறது. இது குறித்து பெங்களூர் ORRCA பொதுச் செயலாளர் கிருஷ்ண கவுடா கூறுகையில், “பெங்களூரில் இன்னும் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு மெட்ரோ சேவை நீட்டிக்கப்படவில்லை. மெட்ரோ கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தால், இதுபோன்ற டிக்கெட்களை வாங்கி தரத் தயாராகவே உள்ளோம்” என்றார்.
மத்திய சில்க் வாரியத்திலிருந்து கேஆர் புரம் வரை செல்லும் 19 கிமீ வெளிவட்டச் சாலை பாதையில் 13 மெட்ரோ நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவை 2025-26க்குள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இதன் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தால் பெங்களூரில் டிராபிக் வெகுவாக குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், முன்கூட்டியே டிக்கெட் எடுப்பவர்கள் ஆன்லைனில் டிக்கெட் எடுப்போருக்குச் சலுகையில் விலை டிக்கெட் வழங்குவதையும் பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் முயலலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.