சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கடந்த 14-ம் தேதி அதிகாலையில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்தின் ரத்த குழாய்களில் தீவிர அடைப்பு இருந்ததால், விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதய அறுவை சிகிச்சை: இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 15-ம் தேதி செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 21-ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இதய தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் குழுகண்காணித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிறைத்துறையினரின் அனுமதி பெற்றுதான் குடும்பத்தினர் அவரை சந்திக்க முடியும். பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய அறுவை சிகிச்சை.
செந்தில் பாலாஜியின் பைபாஸ் அறுவை சிகிச்சையை விமர்சிப்பவர்கள், வேண்டுமென்றால் ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டால்தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
சாதாரண வார்டில்..: இதனிடையே, இதய தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர், செயற்கை சுவாசம் இன்றி, சுயமாக சுவாசித்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.