பாரிஸ்: உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பான 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார்.
சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் லாஜிஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்தார். ஆனால் இந்த சந்திப்புகளைவிட மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு அவர் வந்துசேரும் வீடியோதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
இது தொடர்பான வீடியோவில், ஷெபாஸ் ஷெரீப் காரிலிருந்து இறங்கும்போது மழை பெய்ததால் பெண் அதிகாரி ஒருவர் அவருக்கு குடை பிடித்தபடி வருகிறார். அப்போது அப்பெண் அதிகாரியிடம் இருந்து ஷெபாஸ் ஷெரீப் குடையை வாங்கிக் கொண்டு, தான் மட்டும் தனியாக செல்கிறார். அந்தப் பெண் அதிகாரி கொட்டும் மழையில் நனைந்தபடி பிரதமரை
பின்தொடர்கிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்கள் பிரதமரின் இந்த முரட்டுத்தனமான நடத்தையால் கோபம் அடைந்துள்ளனர். இது அநாகரிமான செயல் என்று பிரதமரை அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.