அல்மோரா: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சிறப்பு முயற்சியால், இந்த முறை அல்மோராவில் உள்ள ஜாகேஷ்வர் கோயிலில் யோகா திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் முதல்வர் தாமி பேசும்போது, “யோகா, தியானம் மற்றும் ஆன்மிக உணர்வின் மையமாக ஜாகேஷ்வர் கோயில் மாற்றப்படும். மானஸ் மந்திர் மாலா மிஷன் திட்டம் ஜாகேஷ்வர் கோயிலிலிருந்து தொடங்கப்படுகிறது. இதன் மூலம் குமாவோன் பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் பல்வேறு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது.
யோகா என்பது அறிவின் வடிவிலான ஒரு பாரம்பரியம். யோகா உடல், மனம், ஆன்மிகம், சமயம் மற்றும் கலாச்சார உணர்வுகளின் கலவையாகும்” என்று முதல்வர் தாமி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.