ப்னோம் பென் : கம்போடியாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பொது தேர்தலில் ஓட்டளிக்காதவர்கள், எதிர்கால தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கும் புதிய சட்டத்துக்கு, அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய சட்டம்
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், பிரதமர் ஹுன் சென்னின் தலைமையில் கம்போடியா மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
அவரது ஆட்சிக் காலம் முடிவடைய உள்ளதால், அடுத்த மாதம் 23ம் தேதி, அங்கு பொது தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலில் ஓட்டளிக்காதவர்கள், அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்வதற்கான புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு துணை பிரதமர் சார் கெங் கூறுகையில், ”தகுந்த காரணமின்றி ஓட்டளிக்காத எவரும், தொடர்ந்து நான்கு தேர்தல்களில் போட்டியிடும் உரிமையை இழக்க நேரிடும்.
”அதேபோல், பொதுமக்கள் ஓட்டளிப்பதை தடுக்கும் அரசியல் கட்சியினருக்கு, 1 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழி செய்யும்,” என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு உரிமை குழுக்கள், ’30 ஆண்டுகளுக்கு மேலாக கம்போடியாவை ஆட்சி செய்யும் ஹுன் சென், தன் அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க, சட்ட அமைப்பை பயன்படுத்தி வருகிறார்’ என, குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு
கம்போடியாவில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த, ‘கேண்டில் லைட்’ கட்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நடக்கவுள்ள பார்லி., தேர்தலில் ஹுன் சென்னின் கட்சி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இதைத் தடுக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு பிரசாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில், புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்