அடர்த்தியான  மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம்: மத்திய அரசுக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தலைமையிலான மத்திய அரசு, அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்தில் மின் நுகர்வோர் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, வழக்கமாக உள்ள கட்டணத்துடன் மேலும் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் விதித்துள்ளது. இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கபட்டுள்ள பெரும் அநீதியாகும். அண்மையில் தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை பெற்று, கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளையை விட கொடியது. இந்த மக்கள் விரோத மின் கட்டண உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னணி: வர்த்தகப் பயன்பாட்டுக்கான புதிய மின்சார பயன்பாட்டுக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பகல் நேரத்தில் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைக்கவும், இரவு நேரங்களில் 20 சதவீதம் வரை உயர்த்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பகல் நேரங்களில் மின்சார பயன்பாடு குறைவாக இருப்பதால் அந்த நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும், இரவு நேரங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க ஊக்குவிக்கவும் இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மின்சார பயன்பாட்டில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதை குறைக்கவும், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பை குறைக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.