அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவர் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் மேகலா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், “தனது அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார். மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் என் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என 2022 ஆகஸ்ட் முதல் அண்ணாமலை பேசி வருகிறார்.
கைதுசெய்து மருத்துவமனையிலேயே ரிமாண்ட் செய்தபோது, அதை ஆட்சேபித்த எங்களது மனுவை நீதிமன்றத்தில் விசாரிப்பதாகக் கூறிய முதன்மை நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றம் வந்தபின்னர், அந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை எனக் கூறிவிட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஜூன் 13-ம் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், நள்ளிரவு 1:39 மணிக்குத்தான் கைதுசெய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. எனவே சட்டவிரோத கைது உத்தரவிலிருந்து என்னுடைய கணவர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும். அந்த மனுவை முறையாகப் பரிசீலிக்காமல் அவரை நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அவரை விடுவிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், “ஜூன் 13-ம் தேதி நடந்த சோதனையின்போது செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறைப்பிடித்ததாகக் கூறுவது தவறு. சட்டப்படி என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ, அந்த நடைமுறைகளை எல்லாம் முறையாகப் பின்பற்றிதான் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். செந்தில் பாலாஜியின் மனைவி, உறவினர்களிடம் கைதுக்கான காரணத்தைத் தெரிவித்து விட்டோம். சாட்சிகளைக் கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் அவர் கைதுசெய்யப்பட்டார். இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களிலிருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணபரிமாற்றக் குற்றம் புரிந்திருக்கிறார் என நம்ப, போதுமான காரணங்கள் இருக்கின்றன.

பெரும்தொகை டெபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் இதுவரை அமலாக்கத்துறை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அமலாக்கத்துறைமீது செந்தில் பாலாஜி தரப்பு கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது. எனவே, மேகலா தாக்கல் செய்திருக்கும் ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து ஜூன் 27-ம் தேதி (நாளை) மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படவிருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, “செந்தில் பாலாஜி குறித்தான பேச்சுகள் இடம்பெறாத பா.ஜ.க மேடைகளே இல்லை எனும் அளவுக்கு, செந்தில் பாலாஜி தொடர்ந்து குறிவைத்து தாக்கப்பட்டார்” என்கிறார்கள் கரூர் உடன்பிறப்புகள் சிலர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர்கள், “ `சாராய அமைச்சர்…’ என்று ஆரம்பித்து ‘விரைவில் சிறைக்குச் செல்வார்…’ என நாளும், பொழுதுமாய் அண்ணாமலை தரப்பு மேடைகளில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் வம்புக்கு இழுத்தார்கள். ஒரு முறை ‘அமலாக்கத்துறையினர் பிசியாக இருக்கிறார்கள். விரைவில் வரப்போகிறார்கள்’ என்று அண்ணாமலை பேசினார். அவர்கள் என்ன இவருடைய அல்லது பா.ஜ.க-வின் கைக்கூலிகளா…

கொங்கு பகுதியில் பா.ஜ.க துளிர்விடுவதுபோல் இருந்தது. அதை செந்தில் பாலாஜி வந்து வேறோடு பிடுங்கி எரிந்தார். அந்த ஒரு காரணத்தினாலேயே இன்று பழிவாங்கப்பட்டிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தபோதே, ‘அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பண்றாங்க. அதனால நமக்கு என்ன பிரச்னை… நமக்கு என்ன வேலை இருக்கோ அதைப் பார்ப்போம். நீங்க எப்போதும் போல கட்சி வேலையைப் பாருங்க’ என்று சொன்னவர். இந்த ஐ.டி , இ.டி எல்லாம் எப்படி டீல் பண்ணனும்னு அண்ணனுக்குத் தெரியும். அதை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்” என்றனர் நம்பிக்கையோடு.
“செந்தில் பாலாஜி ஒன்றும் உத்தமர் இல்லையே… அவர் செய்த தவற்றுக்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் பா.ஜ.க-வினர் சிலர். இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், “சாராய அமைச்சர் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. எங்கள் தலைவர் சொன்னார்தான், அமலாக்கத்துறை விரைவில் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்யும் என்று. அவர் அப்படி சொல்லாமல் இருந்திருந்தாலும்கூட அவர்மீதான நடவடிக்கை இருக்கத்தானே செய்யும்.

சாதாரணமாக தினக்கூலிக்குப் போகிறவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்மீது அமலாக்கத்துறை வழக்கு போடுகிறதா… கோடி கோடியாகக் கொள்ளையடித்திருப்பவர்கள் மீதுதானே வழக்கு தொடுக்கப்படுகிறது. அப்படி கொள்ளையடித்திருப்பவர்களை எங்கள் தலைவர் பட்டியலிடுகிறார். மக்கள் முன் அவர்களைத் தோலுரித்துக் காட்டுகிறார். இவர்கள் இதுபோன்று பேசுவது, தங்கள் மீதுள்ள தவறுகளை மடை மாற்றவும், மறைப்பதற்கும் போடும் நாடகம்” என்கிறார்கள்.