'ஏசி ரயிலில் ஷவர் வசதி' – ஒழுகிய கூரையை சுட்டிக்காட்டிய பயணி; வீடியோவைப் பகிர்ந்து காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மும்பை – இந்தூர் இடையே பயணிக்கும் அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் மேற்கூரையின் வழியாக மழை நீர் ஒழுகுவதை சுட்டிக் காட்டி “இந்திய ரயில்வே துறை ஏசி பெட்டியில் ஷவர் வசதி செய்து கொடுத்துள்ளது” என்று விமர்சித்து ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரயில்வே துறைக்கு கேள்விகளை முன்வைத்துள்ளது.

அதில் இந்திய ரயில்வேயை பகடி செய்து, “வெற்றுப் பிரச்சாரங்களோடு நிற்காமல் ஏதாவது செய்துள்ளனரே என்று நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைக்கும் அமைச்சர் (பிரதமர்) இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதுவரை 18 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கிவைத்த நிலையில் அவரைக் கிண்டல் செய்யும் தொனியில் இந்த ட்வீட்டை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.


— Congress (@INCIndia) June 25, 2023

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பொறுப்புத் தலைவர் நேட்டா டிஸோஸா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரயில்வே துறையின் இதுபோன்ற அவலங்களுக்கு யார் பொறுப்பு” என்று வினவியுள்ளார்.

முன்னதாக அந்த வீடியோவைப் பகிர்ந்த பாதிக்கப்பட்ட பயணி, “இந்திய ரயில்வே ஷவர் வசதியுடன் புதிய சூட் கோச் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் ஷவர் ஜெல், ஷாம்பூ, பாத்ரோப் வழங்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

பயணியின் அந்த வீடியோவும் காங்கிரஸின் விமர்சனமும் வைரலான நிலையில் மேற்கு ரயில்வே ஒரு விளக்கமளித்துள்ளது. அதில், “சம்பந்தப்பட்ட அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரை சரி செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் சவுகரியமே எங்களின் பிரதான இலக்கு. பயணிகளின் எந்தப் புகாரையும் மேற்கு ரயில்வே கண்டுகொள்ளாமல் விடுவதில்லை. இதுவும் சரிசெய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்திய ரயில்களில் ஏசி பெட்டிகளின் தரம் குறித்து விமர்சித்திருந்தார். “ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் பொதுப் பெட்டிகளைவிட மோசமாக உள்ளன. பெர்த்களில் படுக்கவோ, அமரவோ போதிய இடம் இல்லை” என்று அவர் கூறியிருந்தார். அதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “ரயில் பெட்டிகள் பயணிகளை வதைக்கும் கூடங்களாக உள்ளன” என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஏசி பெட்டியில் மழைநீர் வழிந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.