தேயிலை ஆராய்ச்சி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு உதவும் வகையில் “கொவி மிதுர சேவா” (உழவர் நட்பு சேவை) எனும் பெயரிலான செயலியினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், “Ceylon Tea” எனும் இப் பெயரினை உலக அளவில் கொண்டு செல்ல அனைத்துவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சி.எஸ் லொகுஹெட்டி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) காலை நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தேயிலை உற்பத்தியின் உயர் அதிகாரி முதல் கீழ் மட்டத் தொழிலாளி வரை ஆய்வுத்துறை தொடர்பாக அனைத்து விடயங்களையும் தெரிந்துக் கொள்ள 29, 30 திகதிகளிலான தேயிலை ஆய்வு தினத்தினையொட்டி கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோரின் ஒத்துழைப்புடன் “ Open Day” (திறந்த தினமாக) அத் தினங்களைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை நவீன சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உலகளவில் அதிக இலாபமீட்டும் தறையாக தேயிலையை எவ்விதம் முன்னேற்றலாம் என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நவீன சந்தை வாய்ப்புக்களை சிறு உற்பத்தியாளர்கள் தொடக்கம் பாரியளவு உற்பத்தியாளர்கள் வரையில் ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிப்பதாகவும் இச் சந்திப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது வரை 2 மில்லியன் மக்கள் மட்டுமே தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் இவ் உற்பத்தியாளர்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அத்துடன் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வியினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வகைப்பட்ட தேயிலைகளை உற்பத்தி செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்ற தகவல்களும் இவ் ஊடக சந்திப்பில் பகிரப்பட்டது.