Jeeva – அவரைப் போல் இருந்திருந்தால் வாழ்க்கையை என்ஜாய் செய்திருப்பேன்.. இயக்குநர் ஜீவா ஷேரிங்ஸ்

சென்னை: Jeeva (ஜீவா) ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவாவின் 16ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று. இந்தச் சூழலில் அவர் கொடுத்த பழைய பேட்டியை இதில் காணலாம்

இந்திய அளவில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் ஜீவா. அக்னி நட்சத்திரம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், கோபுர வாசலிலே உள்ளிட பல படங்களில் பிசி ஸ்ரீராமிடம் பணியாற்றிய ஜீவா ஸ்ரீராமுக்கு நெருக்கமாக இருந்தவர். அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டு ப்ரியதர்ஷன் இயக்கிய அபிமன்யூ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

முன்னணி ஒளிப்பதிவாளர்: அபிமன்யூ படத்தில் ஜீவாவின் உழைப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனையடுத்து ஜெண்டில்மேன், காதலன், இந்தியன் , ஆசை, வாலி, குஷி, உல்லாசம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஜீவாவின் கேமராவில் எப்போதும் ஒரு தனித்துவம் இருந்தது. இதன் காரணமாக கோலிவுட் ஜீவாவை கெட்டியாக பிடித்துக்கொண்டது. கோலிவுட் மட்டுமின்றி ஹிந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

ஜீவாவின் கேமராவில் எல்லாமே அழகு: ஜீவாவின் கேமராவில் எப்போதும் ஒரு ஃப்ரெஷ்னெஸ் இருந்துகொண்டே இருக்கும். அவரது கண்களின் வழி பார்த்தால் சாதாரண காதல் படங்கள்கூட அடுத்தக்கட்டத்துக்கு சென்றிருக்கும். குஷி படத்தின் லைன் ரொம்பவே சிம்ப்பிளானது. இருப்பினும் ஜீவா அந்தப் படத்தை தனது கேமரா மூலம் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருப்பார். இன்றுவரை விஜய் எத்தனையோ படங்களில் அழகாக இருந்தாலும் குஷியில் அவரை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். அதேபோல் ஆசை, வாலி படங்களிலும் அஜித்தை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருப்பார்.

இயக்குநர் ஜீவா: தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஜீவா ஸ்விட்சர்லாந்தில் வைத்து 12 பி படத்துக்கான ஒன்லைனை பிடித்தார். நண்பர்களின் அறிவுரையை ஏற்று அந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்தார். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர் நிச்சயமாக இயக்குநராகவும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை கோலிவுட்டில் பிறந்தது.

அறிமுகங்கள்: அந்த நம்பிக்கை பொய்த்துப்போகாத வகையில்தான் அவரது படங்களும் இருந்தன. அவர் அடுத்தடுத்து இயக்கிய உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம்(இந்தப் படம் இயக்கும்போது இறந்துவிட்டார்) படங்கள் ஹிட்டடித்தன. குறிப்பாக உன்னாலே உன்னாலே படம் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள ஈகோவை அழகாக வெளிக்கொண்டுவந்த படங்களில் ஒன்று. அதுமட்டுமின்றி அவர் இயக்கியது மொத்தம் ஐந்து படங்கள் (ரன் ஹிந்தி ரீமேக்கும் இதில் அடக்கம்). அந்த ஐந்து படங்களில் மூன்று ஹீரோக்களை (ஆர்யா, ஷாம், வினய்) அறிமுகப்படுத்தினார்.

Cinematographer and director Jeevas 16th Memorial day All Details You Should Know About Him

உயிரிழப்பு: ஜெயம் ரவியை வைத்து தாம் தூம் படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது 43 வயதில் கடந்த 2007ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அதன் பிறகு அவரது உதவி இயக்குநர்கள் அந்தப் படத்தை முடித்தார்கள். இருப்பினும் ஜீவா உயிரோடு இருந்தபோது உருவாக்கப்பட்ட தாம் தூம் வேறு ஒரு டோனில் இருந்ததை படத்தை பார்க்கும்போது உணர்ந்துகொள்ளலாம்.

எம்.ஆர்.ராதா: இந்தச் சூழலில் அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றில், “பெரிய ஹீரோக்களுக்காக நான் எப்போதும் படம் பண்ணுவதில்லை. கதை என்ன கேட்கிறதோ அதைத்தான் செய்வேன். வினய்யை பார்க்கும்போது அவருக்குள் ஒரு திருட்டுத்தனம் இருந்தது. அது எனக்கு பிடித்துப்போனது. அதேபோல் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்.ஆர்.ராதாதான். அவரைப் போல் நக்கல் பிடிச்ச கேரக்டர் எனக்கு வந்திருந்தது என்றால் நிச்சயம் வாழ்க்கையை அவ்வளவு என்ஜாய் செய்திருப்பேன்.

நான் அனைத்திலும் நேர்த்தியை கடைப்பிடிப்பவன். அப்போதுதான் சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும். கொஞ்சம் தூங்கினால்கூட பின்னால் இருப்பவர் என்னை ஓவர் டேக் செய்துவிடுவார்” என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். ஜீவாவுக்கு இன்று 16ஆம் ஆண்டு நினைவு தினம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.