சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.
மாமன்னன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து வரும் ஜூன் 29ந் தேதி வியாழக்கிழமை படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
மாமன்னன் டீசர்: மாமன்னன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 3 நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசர் வடிவேலுவின் அமைதியான வசனத்துடன் தொடங்கி வடிவேலு மற்றும் உதயநிதியின் அதிரடியான தோற்றத்துடன் நிறைவடைகிறது. உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன் போன்ற வசனம் இணையத்தில் மிகவும் பேசப்பட்டது.
மாரிசெல்வராஜின் சர்ச்சை பேச்சு: இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மாரிசெல்வராஜ், தேவர்மகன் திரைப்படம் எனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது . அந்தப்படத்தில் பேசப்பட்ட விஷயம் சரியா? தவறா? என்ற ஊசல் இன்னும் என்னுள் இருந்துக்கொண்டே இருக்கிறது. வடிவேலு அந்த படத்தில இசக்கி என்ற கதாபாத்திரத்தில் வருவார். அந்த கதாபாத்திரம்தான் இந்தப்படத்தில் மாமன்னனாக மாறியிருக்கிறது என்றார்.

சாதிய கண்ணோட்டம்: தேவர் மகன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பி, பெரும் பேசுபொருளானது. படத்தின் கருவை புரிந்துக்கொள்ளாமல் சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என கமல் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு அதிருப்தியை தெரிவித்து சமூகவலைத்தளத்தை தெறிக்கவிட்டனர்.
முன்பதிவு: இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால், ஒட்டுமொத்த திரையுலகமும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் உள்ளனர். இத்திரைப்படத்தின் முன் பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து எழுந்த சர்ச்சைகள் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.