காரைக்கால் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்திப் பெருக்குடன் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்ட பக்தர்கள்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று (ஜூலை 2) நடைபெற்றது.

அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், தேவாரத்துக்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு விழா கடந்த மாதம் 30- ம் தேதி ஆற்றங்கரை சித்திவிநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது. நேற்று 1- ம் தேதி காலை அம்மையார் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம், இரவு கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நடைபெற்றது.

பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் சிவபெருமான்

இன்று (ஜூலை2) அதிகாலை 3 மணியிலிருந்து பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு(கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில்) வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாங்கனித் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா தொடங்கியது.

பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா

இதனையொட்டி அதிகாலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார். காலை 10.30 மணியளவில் கைலாசநாதர் கோயில் வாயிலிருந்து வீதியுலா புறப்பாடு தொடங்கியது. வேதபாராயணங்கள் முழங்க, நாதஸ்வரம், சிவபெருமானுக்குரிய ராஜ வாத்தியங்கள் இசைக்க வீதியுலா நடைபெற்று வருகிறது. கைலாசநாதர் கோயில் வீதி, பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, லெமர் வீதி வழியாக மாலை வரை நடைபெறும் வீதியுலாவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து மிக நீண்ட வரிசையில் நின்று இறைவனுக்கு மாங்கனிகளை படைத்துச் செல்கின்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

வீதியுலாவின்போது பவழக்கால் சப்பரம் ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்த பின்னர் பின்னாலிருக்கும் வீடுகள், கடைகள் மற்றும் மாடிப் பகுதிகளில் கூடியுள்ள ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் அவற்றை பிடித்து எடுத்துச் செல்கின்றனர்.

மாங்கனிகளை பக்தி பரவசத்துடன் வீசும் பக்தர்கள்

இதனால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாங்கனிகளை பெண்கள், முதியவர்கள், சிறார்கள் என அனைத்துத் தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு பிடித்தது காண்போரை பரவசமடையச் செய்கிறது. வீதியுலாவின் நிறைவில் மாலை அம்மையார் கோயிலில் அமுது படையல் நடைபெறவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.