டெட்ரா பேக்கில் டாஸ்மாக் சரக்கு… கலப்படத்தை தடுக்க ஐடியா… விரைவில் அறிவிப்பு!

தஞ்சை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைட் எனும் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் சயனைட் கலந்தது எப்படி? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இதையடுத்து போலி மதுபானம், மதுவில் கலப்படம் செய்வது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பாக்கெட் எனும் காகிதக் குடுவையில்மதுபானம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.

அதன்படி மது பானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபானங்களை டெட்ரா பேக்கில் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என்று கூறியள்ள அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பேக்கை கையாளுவது சுலபம் என்றும் மறுசுழற்சி செய்வதால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் டெட்ரா பேக் குறித்து அதிகாரிகள் குழு வழங்கும் அறிக்கை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்க ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் முத்துசாமி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிதான் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கவனித்து வந்தார். செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த துறை முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.