புதுச்சேரி கனமழை | முறிந்து விழுந்த மரங்கள்; இரவு தொடங்கி அதிகாலைவரை மின்தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மரம் விழுந்து சட்டப்பேரவையின் சுற்றுச்சுவர், பெயர் பலகை சேதம் அடைந்தது. இரவு தொடங்கி இன்று (ஞாயிறு) அதிகாலை வரை நீடித்த மழையால் நகரில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஆறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவில் பலத்த காற்றுடன் பல மணி நேரம் பெய்த கனமழையால் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்து சட்டப்பேரவையின் சுற்றுசுவர் மற்றும் பெயர் பலகை சேதமடைந்துள்ளது. நகரெங்கும் பல இடங்களில் மரங்கள் விழுந்து வாகனங்கள் சேதமடைந்துள்ள. பல இடங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன, அதேபோல் அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காற்றில் வீசப்பட்டு சாலையில் விழுந்தன.

மேலும் நகரின் மையப் பகுதியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த மிக உயரமான பழமை வாய்ந்த மரம் இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது, இதனால் சட்டப்பேரவையின் சுற்றுசுவர் மற்றும் பெயர் பலகை கீழே விழுந்து சேதமடைந்திருக்கிறது, குறிப்பாக சட்டப்பேரவை இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு விழுந்த மரம் எதிரேயுள்ள அம்பேத்கர் சிலை இரும்புகேட்டையும் உடைத்து விழுந்தது. இதனால் சட்டப்பேரவை அமைந்திருக்கக்கூடிய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறைமலை அடிகள் சாலை,அண்ணா சாலை,லெனின் வீதி ஆகிய இடங்களில் விளம்பர பேனர்கள் தூக்கி வீசப்பட்டன.கடலூர் சாலையில் சாய்ந்த மின்கம்பத்தை இளைஞர்கள் உதவியுடன் உருளையன்பேட்டை போலீஸார் அப்புறப்படுத்தினார்கள். இதே போல் புஸ்சி வீதி, மிஷன் வீதி, லப்போர்த் வீதி உள்ளிட்ட நகர பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் மிஷன் வீதி சந்திப்பில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மரம் முறிந்து விழுந்தால் கார் லேசான சேதமடைந்தது. பல இடங்களில் இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

புதுச்சேரியை பொறுத்தவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன, சாலையில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் பேனர்களை நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை மற்றும் பலமாக வீசிய காற்றால் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நிறுத்தப்பட்ட மின் விநியோகம் ஞாயிறு அதிகாலை 4 மணி முதல் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் காற்றும் நின்றதால் அதிகாலை 3 மணி முதல் தீயணைப்பு துறையினர் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை சார்பில் ஆறு குழுக்கள், சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால் அதை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.