மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் புதிய துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸின் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்குப் பின் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய திருப்பமாக பாஜகவுக்கு எதிராக சிவ்சேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் கை கோர்த்து புதிய ஆட்சியை அமைத்தது. ஆனால் இப்புதிய ஆட்சி நிலைக்கவில்லை.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக பிளவுபட்டு பாஜகவை ஆதரித்தது. இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது.
#WATCH | Inside visuals from Maharashtra Raj Bhawan where CM Eknath Shinde, NCP Leader Ajit Pawar and Chhagan Bhujbal are present. pic.twitter.com/lv8aqrF0yI
— ANI (@ANI) July 2, 2023
இந்நிலையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இப்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30 எம்.எல்.ஏக்கள் சரத்பவாரின் சகோதரர் மகன், அஜித் பவார் தலைமையில் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மும்பையில் இன்று திடீரென நடத்தப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 30 எம்.எல்.ஏக்களுடன் ராஜ்பவனுக்கு அஜித்பவார் சென்றார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜக தலைவர்களும் ராஜ்பவனில் திரண்டனர்.
30 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜக ஆட்சியை ஆதரிக்கும் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், புதிய அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இவர்களில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் புஜ்பாலும் ஒருவர்.
அஜித்பவாரின் இந்த கலக முயற்சிகளை கட்டுப்படுத்த, திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்திருந்தார். பின்னர் தமது முடிவை மாற்றினார். மேலும் மகள் சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல் ஆகியோரையும் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்களாகவும் சரத்பவார் அறிவித்தார். இதில் அதிருப்தி அடைந்த நிலையில்தான் அஜித்பவார், 30 எம்.எல்.ஏக்களுடன் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி இருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி- என்சிபி-க்கு மொத்தம் 53 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 30 பேர் அஜித்பவார் தலைமையில் கட்சி தலைமைக்கு எதிராக பாஜகவை ஆதரிக்கின்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.