சென்னை: தமிழ் சினிமாவிலேயே இன்னமும் கமல்ஹாசனுக்கு 150 கோடி சம்பளம் கொடுக்கப்படாத நிலையில், தெலுங்கு சினிமாவில் வெறும் 20 நாள் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு எப்படி 150 கோடி தராங்க என்கிற கேள்வி ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கி இருந்த நிலையில், கமலுக்கு அவ்ளோ பெரிய தொகை கொடுக்கப்படவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில், அந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் இணையப் போகிறார் என்கிற தகவல்கள் கசிந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பையே வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.
பிரபாஸுக்குத்தான் 150 கோடி: வில்லனாக நடிக்க உலகநாயகனுக்கே 150 கோடி சம்பளம் என்றால், அந்த படத்தில் ஹீரோவாக பல மாதங்கள் நடித்து வரும் பிரபாஸுக்கு என்ன 200 கோடி சம்பளமா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், தற்போது டோலிவுட் வட்டாரத்தில் இருந்து பிரபாஸுக்குத் தான் ப்ராஜெக்ட் கே படத்தில் முதன்முறையாக 150 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த தகவல் தான் அப்படியே கமலுக்கு இந்த படத்தில் வில்லனாக நடிக்க 150 கோடி சம்பளம் என காட்டுத்தீயாக பரவி விட்டது என்றும் கூறுகின்றனர்.
தீபிகா படுகோன் சம்பளம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். இதுவரை அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த தீபிகா படுகோன் இந்த படத்தில் அதிகபட்சமாக 15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், இன்னொரு ஹீரோயினான திஷா பதானிக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என்றும் பாலிவுட்டின் பிதாமகரான அமிதாப் பச்சனுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல் சம்பளம் எவ்வளவு: இந்நிலையில், கடைசியாக இந்த படத்தில் இணைந்துள்ள கமல்ஹாசனுக்கு எவ்வளவு தான் சம்பளம் என்கிற கேள்விக்கு விடையாக 20 முதல் 25 கோடி வரை தான் அவருக்கான சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அந்த படம் வசூலிக்கப் போகும் தொகையை கணக்கு வைத்துத் தான் இந்த சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.
விக்ரம் படத்தின் அசுர வெற்றிக் காரணமாகத்தான் இத்தனை கோடி கொடுக்கப்படுகிறது என்றும் மேலும், இந்தியன் 2 படத்துக்கு பிறகு கமல்ஹாசனின் சம்பளம் மற்றும் மார்க்கெட் வேறு ஒரு தளத்துக்கு சென்று விடும் என்றும் பேசப்படுகிறது.