ராமநாதபுரத்தைச் சேர்ந்த குறைப் பிரசவத்தில் பிறந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு தலையில் ரத்தக் கசிவு, நீர் கசிவு இருப்பதாக, குழந்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென குழந்தையின் வலது கை மட்டும் அழுகத் தொடங்கியிருக்கிறது. இதற்கு குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது கவனக்குறைவாக இருந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “குறைப்பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் உடலில் பல பிரச்னைகள் இருந்திருக்கிறது. இதுபற்றி பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். மருத்துவர்களோ, செவிலியர்களோ குழந்தையைக் காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட்டிருக்க வாய்ப்புக் குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என விசாரிக்க 3 மருத்துவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள்தான் ஏற்கவேண்டும். மேலும், குழந்தைக்கு தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவருகின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறார். குழந்தையின் அழுகிய கையை எழும்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. மேலும், குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவலளிக்கப்பட்டிருக்கிறது.