சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இத்திரைப்படம் வரும் ஜூலை 14ம் தேதி திரைகாணக் காத்திருக்கிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ், மிஷ்கின், சூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கின்றனர். இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “நான் இயக்குனரானதை விட என்னுடைய நண்பர் அருண் விஸ்வா தயாரிப்பாளர் ஆனதுதான் எனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நானும் சிவகார்த்துகேயனும் அறிமுகமானதிலிருந்து நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். அவருடைய பந்தில் அதிக முறை அவுட் ஆகியிருக்கிறேன். பந்தை மெதுவாகப் போடுங்கள் என சொன்னால் கேட்கவே மாட்டார்.

“என்னை அவுட்டாக்கிவிட்டு சாரி…சாரி என்பார். சிவகார்த்திகேயனை எப்படி பார்க்க நினைத்தேனோ அப்படியானப் படமாக இந்த மாவீரன் இருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு படத்தின் முதல் பார்வை வெளியாவதிலிருந்து சிவகார்த்திகேயன் படத்தை பற்றி விசாரித்து வாழ்த்துகளைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். ‘வாழை’ படத்துக்கும் வாழ்த்து சொல்லிவிட்டார். வடிவேலு சாரின் புகைப்படத்தை நான் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன்.
அதே அளவுக்கு சரிதா மேடமையும் எனக்கு பிடிக்கும். என்னுடைய கனவு நாயகி அவர். மண்டேலா மாதிரியான சமகால அரசியலைப் பேசக்கூடிய படத்தை நேர்த்தியாகக் கொடுத்தவர் மடோன். அப்படி ஒருவர் கையில் சிவகார்த்திகேயன் கிடைத்தால் என்ன மாதிரியான படம் வரும் என்பதற்கான பதில்தான் மாவீரன்.. எல்லாக் கதவுகளும் திறந்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்ன மாதிரியான படம் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கான வெளி இப்போது உருவாகியிருக்கிறது. மிஷ்கினின் படம் ரத்தமும் சதையுமாக இருந்தாலும் அதில் ஒரு வாஞ்சை இருக்கும்.

எந்தப் படத்தை எடுத்தாலும் சமூகத்திற்குத் தேவையான ஒன்றை வைத்திருப்பார் அஸ்வின். அதுபோல மாவீரன் திரைப்படத்திலும் சமூகத்திற்குத் தேவையான ஒன்று இருக்கும். தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் எப்போது வேண்டுமானாலும் படம் இயக்குவேன். எங்களுடைய தற்போதைய கமின்ட் மென்ட் எல்லாம் முடிந்த பிறகு அதுப்பற்றி பேசி முடிவெடுப்போம். என்னுடைய பரியேறும் பெருமாள் கதையை கேட்டுவிட்டு பல தயாரிப்பாளர்களிடம் பரிந்துரைத்தவர் அருண். ஆகையால், யாரும் தொட தயங்குகிற மற்றவர்கள் எடுக்க பயப்படக்கூடிய ஒரு கதையை அருணிடம் சொன்னால் கூட ஓகே சொல்லிவிடுவார். மாவீரனுக்கு மாமன்னனின் வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.