புதுடெல்லி: பிரதமர் இல்லத்தின் மீது ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நேற்று அதிகாலை ட்ரோன் ஒன்று பறந்தது.
இதுதொடர்பாக பாதுகாப்பு படையினர், டெல்லி போலீஸாரை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ட்ரோனைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை அந்த ட்ரோன் கண்டுபிடிக்கப்பட வில்லை.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை போலீஸார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அதுபோன்ற எந்த ட்ரோனும் தென்பட்டதாக தெரியவில்லை என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.