போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரவேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரவேஷ் சுக்லா தனது பிரதிநிதி இல்லை என பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா மறுத்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிரவேஷ் சுக்லாவின் தந்தை, தனது மகன் எம்.எல்.ஏவிடம் பிரதிநிதியாக பணியாற்றுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சாதிய ஆணவத்தால் நடக்கும் கொடுமைகள் நாடு முழுவதும் தொடர்ந்து வருகின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது ஆதிக்கசாதியை சேர்ந்தவர் என்று கூறப்படும் பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த காட்சிகள் இணையத்தில் வீடியோவாக பரவி வருகிறது.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர், பாஜக இளைஞரணியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பதும், அவர் சிதி தொகுதி பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதி என்றும் கூறப்படுகிறது. வீடியோ வெகுவாகப் பரவியதைத் தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டார்.
இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வர் கமல்நாத், “நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான மற்றும் மோசமான செயலுக்கு இடமில்லை. மத்திய பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு இச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், பயத்தினால் புகார் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், வீடியோ காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதி பிரவேஷ் சுக்லா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சுக்லா ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், பிரவேஷ் சுக்லாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.
இந்த நிலையில் பிரவேஷ் சுக்லாவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என சிதி தொகுதி பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா விளக்கமளித்துள்ளார். கேதார் சுக்லா, பிரவேஷ் சுக்லா தனது பிரதிநிதி அல்ல என்றும், ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அவரை தனக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
அதேசமயம், பிரவேஷ் சுக்லாவின் தந்தை ராமகாந்த் சுக்லா, பிரவேஷ் சுக்லா, தனது மகன் கேதார் சுக்லாவின் பிரதிநிதி தான் என்று கூறியுள்ளார். அவர் பாஜக எம்.எல்.ஏ-வின் பிரதிநிதி என்பதால்தான் அவர் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார். இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்று நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று ராமகாந்த் சுக்லா கூறியுள்ளார்.
பிரவேஷ் சுக்லா காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.