தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மதுரை மாநாட்டின் லட்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுக இரண்டாக, மூன்றாக உடைந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக-தான். அதிமுகவை வீழ்த்த எத்தனையோ வித்தைகளை எல்லாம் திமுகவினர் அரங்கேற்றினர். அனைத்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் மூலமாக தகர்த்து எறியப்பட்டுள்ளது. இனி அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பதை நிருபித்து இருக்கிறோம். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் இல்லை.

சில பேர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். திமுகவின் பி டீமாக இருந்து செயல்பாட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதிமுகவினர் பதில் அளித்துள்ளனர். அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அமையும்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசுடன் பேசி ஜூன் மாத நீர் பங்கீட்டை முதல்வர் ஸ்டாலின் பெறாதது ஏன்? இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட 24 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர் அதிமுக எம்பிக்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம். பாஜக உடனான உறவு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்போம்.

அதிமுக ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டது. கரோனாவை சிறப்பாக எதிர்கொண்டது அதிமுக தான். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுவிட்டது. மக்கள் நலனில் திமுக அரசு அக்கறை செலுத்த வேண்டும். மாமன்னன் திரைப்படம் ஓடுவது முக்கியமில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.