தேனி: “கலந்தாய்வுக் கூட்ட அரங்கில் 15 முறை மின்தடை; விடியல் அரசே… முடியல அரசே!" – சீமான்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் `நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்’ என்ற பெயரில் நடந்த ​பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டம் கேரளாவிடம் சென்றதால்தான் முல்லைப்பெரியாறு பிரச்னை ஏற்பட்டது. இதேபோலதான் நில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு காவிரி தண்ணீருக்காகவும் கர்நாடகத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம். 

கண்ணகி கோயில்

சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோயில் தமிழக எல்லைக்குள் இருந்தது. கண்ணகிக்கு விழா எடுத்து கொண்டாடிவந்த நிலையில், கேரள எல்லைக்குள் கோயில் இருப்பதாக கேரளா கட்டுப்பாடு விதிக்கிறது. டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் தமிழக எல்லையை, தமிழர்கள் நிலத்தை 1,500 கிலோ மீட்டர் அளவுக்கு எடுக்கிறது. இது குறித்து தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. 

தேவதானப்பட்டியில் 60 ஆண்டுகளாக அனைத்து வரிகளையும் முறையாகக் கட்டி, அரசின் அனைத்து ஆவணங்களையும் பெற்று வாழும் மக்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது ஆக்கிரமிப்பு என்றால், கடலில் 130 அடிக்கு பேனா சிலை வைப்பது ஆக்கிரமிப்பு இல்லையா, அதே கடற்கரையில் கல்லறை என்ற பெயரில் 8 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும். 

சீமான்

தமிழகத்தில் காய்கறி விவசாயம் நடக்காததால்தான் வெளிமாநிலங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்காக கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் காய்கறி தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் அதிகமாக உள்ளது. குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அரசு சொல்கிறது. ஆனால் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக நல்ல குடிநீரை அரசு வழங்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். `விடியல் அரசே முடியல அரசே’ என்ற நிலைதான் உள்ளது” என்றார். 

முன்னதாக போடி​யில்​ நடைபெ​ற்ற​​ நிர்வாகிகள் ​க​லந்தாய்வு கூட்டத்தில் ​கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் ஆண்ட, ஆளுகிற தமிழ்நாட்டில், காவல்துறை உள்ளிட்ட உயர் பதவிகளில் எந்தவொரு தமிழரும் இல்லை. காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல், அவர்களுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது தி.மு.க. மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை.

செய்தியாளர் சந்திப்பு

வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்கள் உட்பட அனைவரையும் குடிக்க வைக்கும் தமிழ்நாட்டுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை என்ற அமைச்சகம் தேவையற்றது.​ ​காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றெண்ணி செயல்பட வேண்டும். ​இங்குள்ள ஆட்சியாளர்கள் மின் கொள்முதலில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அதனால்தான் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்தக் கலந்தாய்வு கூட்ட அரங்கில் 15 முறை மின்தடை ஏற்பட்டதே இதற்கு சான்று” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.