‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கடந்த சில அத்தியாயங்களாக குறைமாத பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மருத்துவ பாதிப்புகள் குறித்து பார்த்து வருகிறோம். இந்த அத்தியாயத்தில், குறைமாத பச்சிளங்குழந்தைகளில் ஏற்படும் மற்றுமொரு பாதிப்பான ரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) குறித்து விரிவாகக் காண்போம்.
கேள்வி: எனக்கு 31-வது வாரத்திலேயே குறைப்பிரசவம் ஆனது. குழந்தையின் பிறந்த எடை 1.7 கிலோ. குழந்தை பிறந்த உடன் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினர். மருத்துவர், குழந்தைக்கு தீவிர ரத்தச் சர்க்கரை குறைவு இருப்பதாகவும், அதற்காக ரத்த நாளம் வழியாக குளுகோஸ் கொடுப்பதாகவும் கூறினார். பிறந்த குழந்தைக்கு எவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படுகிறது? அதனால் என்னென்ன பாதிப்புகள் குழந்தைக்கு ஏற்படலாம் என்று விரிவாகக் கூறுங்கள்…

கர்ப்பகாலத்தில், சிசுவின் ஆற்றல் (energy) தேவையில், 60%-70%, குளுகோஸால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்திலிருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவிற்கு குளுகோஸ் பெறப்படுகிறது. சிசுவின் ரத்த குளுகோஸ் அளவு பொதுவாக தாயின் ரத்த குளுகோஸ் அளவில் மூன்றில் இரண்டாக இருக்கும். சிசுவின் குளுகோஸ் தேவையைப் பூர்த்தி செய்ய, கர்ப்பகாலத்தில் தாயின் கல்லீரல் குளுகோஸ் உற்பத்தி 16%-30%-ஆக அதிகரிக்கும்.
குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுகோஸ் குழந்தைக்கு தடைபெறுவதால், தனது ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவினை பராமரிக்க, தனது கல்லீரல் மூலமாக குளுகோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்; மேலும், தாய்ப்பால் குளுகோஸ் அளவினை அதிகரிக்கிறது.
இயல்பாக, குழந்தை பிறந்தவுடன், இந்த உடலியல் மாற்றங்களால், குழந்தை பிறந்த முதல் 1-2 மணிநேரத்தில், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு குறையத் தொடங்கும். சில சமயம் குளுக்கோஸ் அளவு 30 mg/dL-ஆக கூட குறையலாம்.
அதன்பிறகு, குளுகோஸ் அளவு உயரத் தொடங்கி, குழந்தை பிறந்த 3-4 மணிநேரத்தில் 65-70 mg/dL என்னும் சராசரி அளவினை எட்டும். இவ்வாறு, குழந்தை பிறந்த முதல் 1-2 மணிநேரத்தில், உடலியல் மாற்றங்களினால நிகழும் குளுகோஸ் குறைவினை ‘நிலையற்ற பச்சிளங்குழந்தை ரத்தச் சர்க்கரை குறைவு’ (Transient Neonatal Hypoglycemia / TNH) என்போம்.

பிறக்கும் குழந்தைகளில் சராசரியாக, 10 சதவிகிதம் குழந்தைகளில், நிலையற்ற பச்சிளங்குழந்தை ரத்தச் சர்க்கரை குறைவு காணப்படுகிறது. ஆனால், குளுகோஸ் அளவு வேறு காரணங்களினால், தொடர்ந்து குறைவாகக் காணப்பட்டால், அதற்கான காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பச்சிளங்குழந்தைகளில் குளுகோஸ் அளவு 45 mg/dL கீழிருந்தால், அதனை ரத்தச் சர்க்கரை குறைவு என்போம்.
ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகள் மற்றும் அக்குழந்தைகளில் எவ்வாறு ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டுமென்பதை அமெரிக்கன் குழந்தைகள் நல அகாடமி (American Academy of Pediatrics/AAP) அறிவுறுத்தியுள்ளது. AAP-இன் அந்த வழிகாட்டுதல்கள், உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகின்றன.

ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகள்:
* 35 வார கர்ப்பகாலத்திற்கு கீழ் பிறக்கும் குறைமாத பச்சிளங்குழந்தைகள்
* பிறந்த எடை 2 கிலோவிற்கு கீழுள்ள பச்சிளங்குழந்தைகள்
* கர்ப்பகாலத்திற்குரிய எடையிலிருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகள் (birth weight less than 10th centile – Small for Gestational Age/SGA)
* நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள்
* கர்ப்பகாலத்திற்குரிய எடையிலிருந்து மிக அதிகமாக எடையுள்ள பச்சிளங்குழந்தைகள் (birth weight more than 90th centile – Large for Gestational Age/LGA)
* Rh இணக்கமின்மை உள்ள பச்சிளங்குழந்தைகள்
* நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள்
* குடும்ப உறுப்பினர்களில் மரபியல் காரணங்களால் ரத்தச் சர்க்கரை குறைவு நோய் உள்ளவர்கள் மரபணுக் குறை நோய்க்குறி உள்ள பச்சிளங்குழந்தைகள்
* ரத்த நாளம் வழியாக ஊட்டச்சத்து (parenteral nutrition) பெறும் பச்சிளங்குழந்தைகள்
– இந்த பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாகும்.

எனவே, இக்குழந்தைகளில், ஸ்கிரீனிங் குளுகோஸ் பரிசோதனை கட்டாயமாகச் செய்ய வேண்டும். அந்த ஸ்கிரீனிங் குளுகோஸ் பரிசோதனை எவ்வாறு செய்ய வேண்டும், பரிசோதனையில் ரத்தச் சர்க்கரை குறைவு கணடறியப்பட்டால் எவ்வித சிகிச்சை கொடுக்கப்படும் என்பது குறித்து, அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.
பராமரிப்போம்…